(காணொளி): லிட்டில் இந்தியாவில் தீ

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடி கடை வீடு ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கரும்புகை வானளவு உயர்ந்திருப்பதை டிக்சன் ரோட்டுக்கு அருகிலுள்ள மக்கள் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

14 டிக்சன் ரோட்டில் தீச்சம்பவம் நடந்த தகவல் பிற்பகல் சுமார் மூன்று மணிக்குத் தெரிய வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

(காணொளி: வாசகர் ஹரிஷ் மாதவ்)

பிற்பகல் 4.20 மணிக்கு, அந்தத் தீ கட்டுக்குள் இருப்பதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதற்காக நீரைப் பீய்ச்சியடிக்கும் ஆறு குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாக அது கூறியது. மாலை 5 மணிக்கு, தீயும் புகையும் கட்டுப்படுத்தப்பட்டன என்றும் தீயணைப்பு முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆறு நிமிடங்களுக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயணைப்புப் பணிகளில் மொத்தம் 40 தீயணைப்பாளர்கள் ஈடுபட்டனர். இதற்காகப் பன்னிரண்டு அவசர சேவை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.