இயந்திர உலகில் பெயர் பதிக்கும் கார்த்திக்

தனிப்­பட்ட மனநிறைவுக்­காக தொடங்­கிய பொழு­து­போக்கை எதிர்­கா­ல சமு­தா­யத்­திற்­குத் தேவைப்­படும் ஒன்­றாக மாற்­று­வ­தற்கு கார்த்­திக் ராஜ் நாச்­சி­யப்­பன் (படம்), 19, ஒரு நல்ல உதா­ர­ணம். சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மூன்­றாம் ஆண்டு பயி­லும் கார்த்­திக், புதி­ய­ன­வற்­றைப் படைப்­ப­தில் அதிக விருப்­பம் கொண்­ட­வர். தன் தொழில்­நுட்ப அறி­வை­யும் கற்­ப­னைத் திற­னை­யும் வெளிப்­ப­டுத்த இயந்­திர மனி­த­வி­யல் சிறந்த துறை­யாக உள்­ளது என்­றார். இவர் மூன்று வய­தாக இருந்­த­போது பெற்­றோ­ரு­டன் தமி­ழ­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்­தார். அப்­போது கார்த்­திக் உல­க­ளா­விய இந்­திய அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் படித்­தார். 2008ல் ஏழு வய­தாக இருந்­த­போது அப்­போ­தைய இந்­திய அதி­பர் ஏ.பி.ஜே அப்­துல் கலாம் தம் பள்­ளிக்கு வந்­த­து­மு­தல் தமக்கு அறி­வி­யல் பாடத்தில் ஆர்­வம் அதி­க­ரித்­த­தாக இந்த இளை­யர் கூறகிறார். 

“அவர் என்­னு­டன் கைக்­கு­லுக்­கிய ஞாப­கம் இன்­ன­மும் எனக்கு உள்­ளது. அத்­து­டன் டாக்­டர் கலாம் சிந்­த­னை­யைத் தூண்­டும் விதமாக உரையற்­றி­னார்,” என்­றார் கார்த்­திக். பத்து வய­திற்கு முன்­பா­கவே சிறார்­க­ளுக்­கான அடிப்­ப­டை­நிலை அறி­வி­யல் போட்­டி­களில் கலந்­து­கொண்ட கார்த்­திக், சென்­னைக்­குத் திரும்­பி­ய­போது அங்­கும் பல்­வேறு போட்­டி­களுக்கான அறி­வி­யல் வகுப்­பு­களில் சேர்ந்­தார். தமது 13வது வய­தில் முதல் இயந்­திர மனி­த­னைப் பயி­ல­ரங்கு  ஒன்­றின் மூல­மா­கச் செய்­யக் கற்­றுக்­கொண்­டார். 

“எதிரே சுவர்­கள் இருப்­பதை உண­ரும் தானி­யக்க இயந்­தி­ரங்­கள், குறிப்­பிட்ட ஒரு பாதை­யில் வழு­வா­மல் செல்­லும் இயந்­தி­ரங்­கள், இரு சக்­கர இயந்­திர மனி­தர்­கள், கவச வாகன வடி­வி­லான இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை இது­வரை நான் உரு­வாக்­கி­யுள்­ளேன்,” என்­றார் கார்த்­திக். 

பதி­னைந்து வய­தா­ன­போது கார்த்­திக் மீண்­டும் குடும்­ப­மாக சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்­தார். அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் உயர்­நிலை மூன்­றில் சேர்ந்த இவர், இந்­நாட்­டின் கல்வி முறைக்கு ஏற்ப மாற ஆரம்­பத்­தில் சிர­மப்­­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார். “என் பேச்­சில் இந்­திய தொனி தூக்­க­லாக இருந்­த­தால் என்­னைச் சிலர் கேலி செய்­த­னர். இருந்­த­போ­தும் காலப்­போக்­கில் எனக்கு நண்­பர்­க­ளா­கி­னர்,” என்று அவர் கூறி­னார். பள்­ளிப் பாடங்­க­ளி­லும் தொடக்­கத்­தில் சிர­மப்­பட்­டார். இந்­தி­யா­வில் தமிழ் மொழியை உயர்­நிலை பள்ளி வரை படிக்­கா­த­தால் இங்கு அவர் ‘பி’ பாடத்­திட்­டத்­தின்­கீழ் தமிழ் படித்­தார். 

பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் சாதா­ரண நிலை­யில் பதி­னைந்து புள்­ளி­க­ளைப் பெற்­றார். தாம் விரும்­பிய இயு­னோயா தொடக்­கக் கல்­லூ­ரிக்­குத் தகு­தி­பெ­றா­த­தால் பல­துறை தொழிற்­கல்­லூ­ரிக்­குச் சென்று பொறி­யி­யல் துறை­யில் பயில முடிவு செய்­தார். 

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தது முதல் அவ­ரது கல்வி பிர­கா­சிக்­கத் தொடங்­கி­யது. தேர்­வு­களில் சிறப்­பா­கச் செய்து வந்­த­தால் அவ­ரது ஜிபிஏ புள்­ளி­கள், இப்­போது 4க்கு 3.927 என்று உள்­ளது. இவ­ருக்கு ‘முன்­மா­திரி மாண­வர்’ விரு­தும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பல­துறை  தொழிற்­கல்­லூ­ரி­யின்­போது கார்த்­திக் தொடர்ந்து அறி­வி­யல் போட்­டி­களில் பங்­கேற்று பரி­சு­களை வென்­றார். போட்டி என வந்­தாலே தாம் மிக­வும் உற்­சா­கப்­ப­டு­வ­தா­கக் கூறும் இவர், வெற்­றி­யை­விட அனு­ப­வமே முக்­கி­யம் எனக் கூறு­கி­றார். பல்­வேறு மாண­வர் நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்த கார்த்­திக், மாண­வத் தூது­வர்­களில் ஒரு­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார். பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தால்  படிப்­ப­தற்­காக அதிக நேரம் செல­விட முடி­ய­வில்லை என்­றார். “இருந்­த­போ­தும் படிக்­கும்­போது நான் முழுக் கவ­னத்­து­டன் படிப்­பேன்,” என்று கார்த்­திக் கூறி­னார்.

இயந்­தி­ர­வி­ய­லில் ஈடு­ப­டத் தம் தந்­தை­யும் பள்ளி விரி­வு­ரை­யா­ளர்­களும் பேரா­த­ரவு அளித்­த­னர். அத்­து­டன் சுய கற்­ற­லி­லும் அவர் அதி­கம் ஈடு­பட வேண்­டி­யி­ருந்­தது. “யூடி­யூப் காணொ­ளி­கள் மூல­மா­கத்­தான்  இயந்­தி­ர­வி­ய­லின் பெரும்­ப­கு­தி­யைக்  கற்­றுக்­கொண்­டேன்,” என்­றார். இயந்­தி­ரம் ஒன்றை வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கும் முன்­னர் பல தோல்­வி­க­ளைச் சந்­திக்க வேண்­டி­ய­தாக இருந்­த­தெ­னக் கூறி­னார்.

இயந்­திர மனி­தர்­களை உரு­வாக்­கத் துல்­லி­ய­மான திட்­ட­மி­டு­தல் தேவை. சிறு பிழை ஏற்­பட்­டால்கூட முயற்சி தோல்­வி­யில் முடி­ய­லாம். பல­முறை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தாம் தரு­விக்­கும் இயந்­தி­ர பாகங்­கள் சரி­யான அள­வில் இல்­லா­மல் போக அதே பாகங்­களை மீண்­டும் வாங்­கும்­போது பண­மும் நேர­மும் விர­ய­மா­வ­தாக அவர் கூறி­னார். “ஆனால் ஓர் இயந்­தி­ரத்தை வெற்­றி­க­ர­மாக முடிக்­கும்­போது அதில் கிடைக்­கும் மன­நி­றைவே தனி,” என்­றார். “மன­தில் குறிக்­கோ­ளைப் பதிய வைத்­தால் தொய்­வுக்­கும் சலிப்­புக்­கும் இட­மில்லை,” என்­றார். 

இந்­தோ­னீ­சி­யா­வின் பாண்­டுங் நக­ரத்து பயிர் திடல்­களில் இயந்­திர மனி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் திட்­டத்­தை­யும் கார்த்­திக் அங்­குள்ள விவ­சா­யி­க­ளி­டம் விளக்­கிக் காட்­டி­னார். மண்­ணி­லுள்ள அமி­லத்­தன்­மையை அள­விட அந்த இயந்­தி­ரங்­கள் உத­வும் என்று தாம் கூறி­யது அங்­குள்­ளோரை வியக்­கச் செய்­த­தா­க கார்த்­திக் தெரி­வித்­தார்.

‘செஸ்டோ ரோபோட்­டிக்ஸ்’ இயந்­தி­ர­வி­யல் நிறு­வ­னத்­தில் வேலைப் பயிற்­சி­யில் சேர்ந்­த­போது அவர் அங்­கும் இயந்­திர மனி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. “வேலை­யி­டச் சூழ­லில் இயந்­திர மனி­தர்­கள் அங்­கு­மிங்­கும் செல்­வ­தைக் காண்­பது புதிய அனு­ப­வ­மாக இருந்­தது,” என்று அவர் கூறி­னார். இயந்­திர மனி­தர்­களை இயக்­கும் மத்­திய கணி­னி­யைப் பயன்­ப­டுத்­த­வும் பழு­த­டைந்த இயந்­திர மனி­தர்­க­ளைச் சரி­செய்ய உத­வ­வும் அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­தது.

தேசிய சேவைக்­குப் பிறகு தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் அல்­லது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படிக்க விரும்­பு­கி­றார் இந்த இளை­யர். “தமது ஆர்­வம் என்­ன­வென்று அறிந்­த­வர்­கள் அதில் விடா­மு­யற்­சி­யு­டன் தொடர்ந்து ஈடு­பட்­டால் எதிர்­கா­லம் பிர­கா­ச­மாக இருக்­கும்,” என்று அவர் கூறி­னார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்