தேர்தல் கூட்டணி: அன்வார்=மகாதீர் கைகோப்பு

மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கடந்த காலத்தில் பரம எதிரிகளாக இருந்த மகாதீர் முகம்மதுவும் அன்வார் இப்ராகிமும் கைகோத்து ‘பக்காத்தான் ஹரப்பான்’ எதிர்க் கட்சிக் கூட்டணிக்குத் தலைமை ஏற்கவுள்ளனர். ஓரினப் புணர்ச்சி குற்றத்திற் காக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதம ரான அன்வார், 69, நான்கு கட்சி கூட்டணியான ‘பக்காத்தான் ஹரப் பானின்’ உண்மைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

22 ஆண்டுகாலம் மலேசியப் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர், 92, கூட்டணியின் தலைவராகவும் அன்வாரின் மனைவி டாக்டர் வான் அஸிஸா இஸ்மாயில், 64, பக்காத்தான் ஹரப்பானின் தலை வராகவும் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்வார் மற்றும் மகாதீரின் ஆதரவாளர்களுக்கு இடையிலான உரசல் போக்கைத் தீர்ப்பதற்கான ஒரு சமரச முயற்சியாக இக்கூட் டணி நடவடிக்கை கருதப்படுகிறது. அன்வாரின் பிகேஆர், மகா தீரின் பிரிபூமி, ஜனநாயகச் செயல் கட்சி, பார்ட்டை அமானா ஆகிய நான்கு கட்சிகள் அடங்கிய இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமைத்துவத்தைத் தீர்மானிப்ப தற்காகப் பல மாதங்களாக பேச்சு வார்த்தை இடம்பெற்று வந்தது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தப்படவேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்தல் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியில் அங்கம் வகித்துள்ள 13 கட்சிகளும் ஒரு சின்னத்தின்கீழ் போட்டியிட்டது போல, எதிர்க்கட்சிக் கூட்டணி யான பக்காத்தான் ஹரப்பானும் ஒரே சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு வழிவகுக்கும் வகையில், தங்களது எதிர்க்கட்சிக் கூட்டணி முறைப்படி பதிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

இருந்தபோதும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அன்வார் சிறை யில் இருந்து உடனடியாக விடு தலை ஆனாலும் அவரால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட இயலாது. அவருடைய மனைவியும் பிகேஆர் கட்சியின் தலைவருமான டாக்டர் வான் அஸிஸா வலுவான பிரதமர் வேட் பாளராகக் கருதப்படவில்லை. அதே நேரத்தில், இப்போது தங்களது கூட்டணியில் இணைந் தாலும் முன்பு தங்களது நீண்டகால எதிரியாக இருந்த டாக்டர் மகா தீரை ‘பக்காத்தான் ஹரப்பானின்’ பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அக்கூட்டணியின் மற்ற கட்சிகள் தயங்குவதாகத் தெரிகிறது. முன்னதாக, ‘நான் பிரதமர் வேட்பாளர் இல்லை’ என்று கடந்த மாதம் அன்வார் தாமாகவே முன் வந்து அறிவித்தது பெரும் ஆச்ச ரியமளிப்பதாக இருந்தது.