சுடச் சுடச் செய்திகள்

ரசாயனத் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் சிரியா படை

வா‌ஷிங்டன்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள இட்லிப் மாநிலத்தைக் கைப்பற்ற கடுமையாகச் சண்டையிட்டு வரும் அரசாங்கப் படை ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் இருப்பதாக சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜிம் ஜெஃப்ரி கூறியுள்ளார். போராளிகள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படை ரசாயனத் தாக்குதல் நடத்தினால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பும் அரசாங்கப் படை சிரியாவில் ரசாயன ஆயுதங் களைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதை சிரியா அரசாங்கம் மறுத்து வந்துள்ளது. சிரியாவில் போராளிகள் வசம் இருந்த பல பகுதிகளை அரசாங்கப் படை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் இட்லிப் மாநிலம் மட்டுமே இன்னமும் போராளிகள் வசம் உள்ளது. அந்த மாநிலத்தைக் கைப்பற்ற சிரியா அதிபர் ஆசாத்தின் படைகள் ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பகுதியில் ரஷ்ய விமானங்கள் குண்டு வீசித் தாக்கி வரும் வேளையில் அரசாங்கப் படையும் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.