வேலை இடங்களில் 55 மரணங்கள்: தவிர்த்திருக்கலாம் என கருத்து

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரையில் வேலை இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 55 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே சென்ற மாதம் எச்சரித்தார். இந்த மரண விகிதம் இந்த ஆண்டு 100,000 ஊழியர்களுக்கு 2.2 என்ற அளவை எட்டிவிடக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார். இந்த மரண அளவு கடந்த 2004ல் 4.9 ஆக இருந்தது. 2008ல் இந்த அளவு 2.8 ஆக இருந்தது. அதைக் குறைக்க பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார். பிறகு சிங்கப்பூர் 1.8 என்ற இலக்கை 2014ல் எட்டியது. ஆனால் சென்ற ஆண்டு இந்த அளவு 1.9க்கு கூடிவிட்டது. சென்ற ஆண்டில் 66 பேர் மரணமடைந்தார்கள். கட்டுமானத் துறையில்தான் இந்த மரண அளவு அதிகமாக இருக்கிறது. சென்ற ஆண்டில் கட்டுமான இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 20 பேர் பலியானார்கள். வேலையிடங்களில் நிகழ்ந்துள்ள விபத்துகள் தவிர்த்துவிடக்கூடியவைதான் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next