ஆகாயப்படை விமானி காணவில்லை; இந்திய அரசு உறுதி செய்தது

இந்திய போர்விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் தனது விமானி ஒருவர் காணவில்லை என உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் அந்த விமானியைப் பிடித்து வைத்திருப்பதாக இன்று பிற்பகல் தெரிவித்தது. அந்த விமானியைக் காண்பிக்கும் காணொளி ஒன்றை பாகிஸ்தானிய அரசாங்கம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

முகத்தில் காயங்களுடன் காணப்பட்ட அந்த விமானி, தனது பெயர் அபிநந்தன் என்றும் தாம் இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி என்றும் தெரிவித்தது காணொளியில் பதிவாகியுள்ளது. தாம் ஓர் இந்து என்றும் மேற்கொண்டு எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அந்தக் காணெளியின் வெளியீடு ஜெனீவா போர்விதிமுறை உடன்பாட்டுக்குப் புறம்பானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். காணொளி பின்னர் டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றப்பட்டது. 

விமானிகள் அனைவரும் எங்கே உள்ளனர் என்பதை நன்கு அறிவதாக முன்னர் கூறியிருந்த இந்திய அரசு, அபிநந்தன் காணாமல் போனதாக பின்னர் உறுதி செய்தது. 

அபிநந்தன் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு ஆதரவாக #SaveAbhinandan #BringBackAbhinandan ஆகிய தொடர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்