முரசொலி: கொரோனா மிரட்டல் போதாதா, வெறுப்புணர்வு வேறு தேவையா...

முரசொலி

கொரோனா கிருமி உலகம் முழுவதும் பரவி உண்டு இல்லை என்று பார்த்துவிடும் அளவுக்கு மிரட்டி வருகிறது. இந்த நிலையில், அந்தக் கிருமிகள் சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து கிளம்பி இருப்பதால், கொரோனாவைவிட இன்னும் மோசமான வேண்டத்தகாத வெறுப்பு உணர்வு ஒன்றும் பூதாகரமாகக் கிளம்பி இருக்கிறது. 

கொரோனாவுக்கு சீனாவே மூலம் என்பதால், சீனர்களுக்கு எதிராகவும் சீன வம்சாவளியினருக்கு எதிராகவும் பல நாடுகளிலும் இத்தகைய உணர்வுகள் தலைதூக்கி இருக்கின்றன. ஐரோப்பிய பள்ளிக்கூடங்கள், தங்கள் மாணவர்களை சீனாவுக்கு அனுப்புவதையும் சீன மாணவர்களை ஏற்றுக்கொள்வதையும் நிறுத்தி இருக்கின்றன. 

தென்கொரியாவில் உள்ள உணவகங்கள், சீன நாட்டினருக்குக் கதவை மூடிவிட்டன. 19வது நூற்றாண்டில் தலைதூக்கி இருந்த ‘மஞ்சள் இன மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆபத்தானவர்கள்’ என்ற ஒரு கருத்து பிரான்ஸ் நாட்டு செய்தித்தாளில் இப்போது தலைகாட்டி இருக்கிறது. 

டென்மார்க்கில் வெளியாகும் ஒரு செய்தித்தாள், நட்சத்திரங்களுக்குப் பதிலாக கிருமி உருவங்களுடன் சீன தேசிய கொடியை கார்ட்டூனாக வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் மக்களுக்குத் தடை விதிக்கும்படி மலேசியாவில் 400,000 பேருக்கும் அதிமானோர் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். 

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவமனை ஊழியர்கள், சீனப் பெரு நிலத்துடன் கூடிய எல்லையை முற்றிலும் மூடவேண்டும் என்று வேலை நிறுத்தத்தில்கூட ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சார்ஸ் தொற்றியபோது தாங்கள் எதிர்நோக்கிய எதிர்ப்பு உணர்வுச் சங்கடங்களை இப்போது மீண்டும் தாங்கள் எதிர்கொள்வதாக கனடா சீனர்கள் கூறுகிறார்கள். 

உலக நிலவரம் இப்படி இருக்கையில் நோவல் கொரோனா கிருமி போதாது என்று இத்தகைய வெறுப்புணர்வு சிங்கப்பூரிலும் இலேசாக தலையெடுப்பது போல் தெரிகிறது. 

 இங்கு சில குழுக்கள் சீன நாட்டினருக்கு எதிரான உணர்வுகளை  வெளிப்படுத்தி உள்ளன. இதைவிட மோசமாக சீன நாட்டினருக்கு எதிராக நில உரிமையாளர்களும் சேவை வழங்குவோரும் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பதும் தெரியவந்து உள்ளது. 

  சிங்கப்பூரைச் சேர்ந்த அப்துல் ஹலிம் அப்துல் கரிம் என்ற சமயப் போதகர், ஜனவரி 29ஆம் தேதி பகிரங்க ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்த கருத்துகள் பற்றி உள்துறை அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் ஸின்ஜியாங் மாநிலத்தில் முஸ்லிம் மக்களை சீன அரசாங்கம் நசுக்குகிறது என்றும் அதற்கு அல்லா கொடுத்த தண்டனைதான் கொரோனா கிருமி என்றும் அந்தப் போதகர் குறிப்பிட்டு இருந்தார். 

அதோடு மட்டுமின்றி, கொரோனா கிருமிகள் மலம் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அந்தப் போதகர், தன்னுடைய நண்பர்கள் மட்டும் பார்த்து படிக்கக்கூடிய ஃபேஸ்புக் பக்கத்தில் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தார். 

சீனர்கள் முஸ்லிம்களைப் போல சுத்தமானவர்கள் அல்ல என்றும் அதன் காரணமாகவே கிருமிகள் பரவிவிட்டதாகவும் அவர்  குறிப்பிட்டு இருந்தார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், அந்தப் போதகர் தெரிவித்துள்ள கருத்துகள் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அந்தக் கருத்துகள் முற்றிலும் இனவாத கருத்துகள் என்றும் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கிருமி தொற்றிவிடும் என்று அஞ்சுவது நியாயமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அந்தக் கிருமிகள் சீனாவில் தோன்றியது என்பதை மட்டும் வைத்து சீனர்கள் மீது வெறுப்பு காட்டுவது என்பது தார்மீக ரீதியிலும் சரி வேறு எந்த வகையிலும் சரி சரியானதாக இராது என்பதே உண்மை. 

அதுவும் சிங்கப்பூரை பார்க்கையில் அதற்கு வெளிநாட்டினர் மிக முக்கியமானவர்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

கொரோனா கிருமிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடு சீனாதான். அந்தக் கிருமிகளைத் துடைத்தொழிக்கும் முயற்சிகளை சீனாவே முன்நின்று முழுமூச்சாக மேற்கொண்டு வருகிறது. 

அனைத்துலக முயற்சிகளில் சீனா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறது. அந்த உலக முயற்சிகளில் சிங்கப்பூரும் சேர்ந்துகொண்டு இருக்கிறது. சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக எந்தப் பிரச்சினையையும் வெற்றிகரமான முறையில் சமாளித்து பாதகங்களைத் தவிர்த்துக்கொள்வார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டு வந்துள்ள உண்மை. 

சீனாவில் இருந்தே சார்ஸ் கிருமிகளும் முன்பு தோன்றியபோது சிங்கப்பூரர்கள் நடந்துகொண்ட விதமும் இதர நெருக்கடிகளை அவர்கள் சமாளித்துவந்துள்ள பாங்கும் இதையே புலப்படுத்துகின்றன. 

ஆகையால் சீன நாட்டு மக்களை அல்லது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களைப் பாரபட்சமான முறையில் நாம் நடத்தினால் அந்தப் போக்கு சிங்கப்பூரர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்த்துவிடக் கூடியதாகவே இருக்கும் என்பது நிச்சயம். அந்த நம்பிக்கைதான் நம் வெற்றிக்கு அடிப்படை. 

நிலத்தில் களைகள் கிளம்பும்போது  களைகளை எல்லாருமாகச் சேர்ந்து அழிப்பதே விவேகமாக இருக்கும். நிலத்தையே வெறுப்பது நமக்குத்தான் பாதகம்.