முதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்

சிங்கப்பூரில் 1965ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மக்கள்தொகை 1.9 மில்லியனி லிருந்து 5.8 மில்லியனாகக் கூடி இருக்கிறது. அதேவேளையில் 65 அல்லது அதற்கு மேற் பட்ட வயதுள்ள சிங்கப்பூரர்களின் எண் ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 
இத்தகைய முதியவர்களின் எண்ணிக்கை 2000மாவது ஆண்டில் 220,000 பேராக இருந்தது. அது இப்போது இரண்டு மடங்குக் கும் அதிகமாகக் கூடிவிட்டது. இப்படியே போனால் 2030ஆம் ஆண்டில் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளோரின் எண் ணிக்கை, நான்கு பேரில் ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும். 
ஒரு நாட்டில் முதியவர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களால் அந்த நாட்டிற்கு பொருளியல் ரீதியிலும் இதர வகையிலும் ஏற் படக்கூடிய சுமையும் கூடும். 
அதுவும் மக்கள் ஒன்றையே வளமாகக் கொண்டுள்ள சிங்கப்பூரைப் பொறுத்தவரை யில், குறிப்பாக மூப்படையும் மக்கள் தொகை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக் கிறது. இங்கு மக்கள் தொகை மூப்படையும் அதேவேளையில், சிங்கப்பூரர்களின் ஆயுளும் கூடிவருகிறது. 
ஆகையால், முதியவர்கள் நாட்டுக்கும் பொருளியலுக்கும் தங்களுக்கும் சுமையாக இருப்பதை நீண்டகாலப் போக்கில்  கூடுமான வரையில் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், சிங்கப்பூரர்கள் வெற்றி கரமான முறையில் மூப்படைவதை உறுதிப் படுத்த, 2015ஆம் ஆண்டில் $3 பில்லியன் செயல்திட்டத்தின் கீழ் ஏராளமான நடவடிக்கைகள் நடப்புக்கு வந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 
இவை ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் முதியவர்களின் தலைமுறைகளையும் வெற்றி கரமானதாக  ஆக்கவேண்டிய தேவை இருப்ப தால் இதற்கும் முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியமானதாகிவிட்டது. 
இத்தகைய முதிய தலைமுறையினரின் தேவைகளும் விருப்பங்களும் வேறுபட்டவை. ஆகையால் இவர்களுக்கு ஏற்ற திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
முதியவர்கள் பெருகப் பெருக அவர் களுக்குப் பராமரிப்பு வழங்கி அவர்களை அதிக காலம் கவனித்துக்கொள்ளவேண்டிய பராமரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பது நிச்சயம். இத்தகைய பராமரிப் பாளர்களுக்கும் ஆதரவான சூழல்களை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. 
இவர்களுக்குப் பொறுப்புகளும் மன உளைச்சலும் அதிகம் என்பதை மறுப்பதற் கில்லை. இவற்றை  எல்லாம் கருத்தில் கொண்டே ‘பராமரிப்பாளர் ஆதரவுச் செயல் திட்டம்’ என்ற ஒரு திட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி இருக்கிறது. 
இந்தத் திட்டம், நிதி உதவி முதல் ஆதரவு உதவிகள் வரை பலவற்றையும் கொண்டிருக் கிறது.  
முதியவர்களும் பராமரிப்பாளர்களும் தக வல்களைப் பெறுவதற்காக இன்னும் பல தக வல் முகப்புகளை அமைப்பது, மக்கள் உதவி நாடுவதை எளிமையாக்கும் வகையில் மேம் படுத்தப்பட்ட மின்னியல் தளங்களை உருவாக் குவது; செலவுகளைச் சமாளிக்க மாதம் $200 ஆதரவு மானியம் வழங்குவது, உடன் பிறந்தவர்களின் சுகாதாரப் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில் மெடிசேவ் எனப்படும் மருத்துவச் சேமிப்புக் கணக்குப் பயனீட்டை விரிவுபடுத்துவது, பராமரிப்பா ளர்கள் ஆதரவு கட்டமைப்பு, முதியோர் பரா மரிப்புப் பயிற்சியை மேம்படுத்துவது உள்ளிட்ட பலவும் அந்தச் செயல்திட்டத்தில் இடம்பெற் றுள்ளன. 
நாளை நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இந்தத் திட்டங்கள் தொடர்பிலான பல விவரங்களும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இவை எல்லாம் பல சூழ்நிலைகளில் முதி யோரைக் கவனித்துக்கொள்கின்ற பராமரிப் பாளர்களின் சுமைகளைக் குறைக்கும். 
சிங்கப்பூரின் ஒரே சொத்து அதன் மக்கள் தான். அந்த மக்கள் தொகை பெருக்கம், இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு  இல்லை. மக்களின் ஆயுள் கூடிவருகிறது. மக்கள் தொகை வேகமாக முப்படைந்து வருகிறது. 
இத்தகைய ஒரு சூழலில், அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வரும்  புதிய திட்டங் கள், முதியவர்கள் வளமும் அவர்களைக் கவனித்துக்கொள்ள தேவைப்படும் பராமரிப் பாளர்கள் வளமும் வெற்றிகரமான முறையில் நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவுவதற்கு உறுதுணையாக இருந்து விரும்பிய பலன்களை ஏற்படுத்தித் தரும் என்று நம்பலாம்.