2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்

ஹான் ஃபூக் குவாங்

பொது ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் ஹெங் சுவீ கியட்டை பிரதமராகக் கொண்ட அடுத்த அரசாங்கத்தின் மீதே இந்த ஆண்டில் ஒருமித்த கவனம் செலுத்துவார்கள் என்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பிப்ரவரியில் அரசாங்கம் செய்யும் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிறகு பொதுத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா பொதுத் தேர்தல்களுமே முக்கியம் என்றாலும் சில தேர்தல்கள் மற்றவற்றைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

பிரதமர் என்ற முறையில் திரு லீ சியன் லூங் எதிர்நோக்கும் தேர்தல் இதுவே கடைசியாக இருக்கும் என்று தெரிவதால் இது மிகவும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டு தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவியை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடம் ஒப்படைத்தால், அது 55 ஆண்டுகால வரலாற்றில் ஒரு புதிய பிரதமர் பதவி ஏற்கும் மூன்றாவது முறை பிரதமர் பதவி கைமாறும் நிகழ்வாக இருக்கும்.

சிங்கப்பூரில் ஆளும் கட்சியின் அரசியல் வாரிசுத் திட்டங்கள் முன்னதாகவே நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாலும் ஒவ்வொன்றும் வேறுபட்டு இருக்கும்.

ஏற்கெனவே இடம்பெற்ற இரண்டு புதிய பிரதமர்கள் பொறுப்பேற்ற சம்பவங்களுக்கும் இப்போது இடம்பெற இருக்கும் சம்பவத்துக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட சிறப்பு என்னவாக இருக்கும்?

எவை மாற்றமில்லாமல் இருக்கும்? எத்தகைய பிரச்சினைகள் தலைதூக்கும்?

பிரதமர் திரு லீ, தான் விலகுவதற்கு முன் நிலுவையில் உள்ள அரசியல் ரீதியில் சவால்மிக்க பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டுவிட விரும்புவார் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுவே ஆளும் கட்சியின் வழமையாகவும் இருந்து வந்து உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு அதிபர் பதவியை ஒதுக்கும் சர்ச்சைக்கிடமான ஓர் ஏற்பாடு அறிமுகமானதற்குப் பின் 2017ஆம் ஆண்டில் ஹலிமா யாக்கோப் அதிபராகப் பதவி ஏற்றார்.

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த அதிபர்களை சிங்கப்பூர் தொடர்ந்து தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை திரு லீ விளக்கி இருந்தார்.

இந்த ஏற்பாடு அவசரமாக இடம்பெற்ற ஒன்று என்று தோன்றினாலும் அடுத்த பிரதமரிடம் பொறுப்பு போகவிருப்பதை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது அவசியம் என்றே தெரிகிறது.

போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டம், சமய நல்லிணக்கச் சட்டம் எல்லாம் சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்டதற்கும் இதுவே காரணம்.

இருந்தாலும் ஜிஎஸ்டி வரி உயர்வு என்பது, இந்த அரசியல் வாரிசு மாற்ற காலகட்டத்தின்போது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான அதிபர் பதவி ஏற்பாட்டைவிட மக்களிடம் கூடுதலான கசப்பைப் பெறும்.

இதனை அரசியல் ரீதியில் புரிந்துகொள்வதும் இன்னும் சிரமம்.

தேர்தலுக்கு முன் வரி உயர்வை எந்தக் கட்சிதான் அறிவிக்கும்?

தன்னுடைய அரசியல் வாரிசு பதவி ஏற்பதற்கு முன்பாக பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டு அவரிடம் நல்ல நிலையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் செயல் கட்சித் தலைவரால்தான் இப்படி செய்ய முடியும்.

இது நாட்டுக்கு நல்லதா? இந்தக் கேள்விக்கு நேரடி பதில் இல்லை. புதிதாகப் பதவி ஏற்கும் பிரதமர் தம்முடைய சொந்த நிகழ்ச்சி நிரல்களில் ஒருமித்த கவனம் செலுத்த இது உதவக்கூடும்.

ஆனாலும், ஏற்கெனவே அளவுக்கு அதிகமான கொள்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டு இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமர் தனது சொந்த இலக்கை நிர்ணயிப்பதற்கான வாய்ப்புகளை அது கட்டுப்படுத்திவிடும்.

பிரதமர் லீ செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு 2020ஆம் ஆண்டு இருக்காது. அவருடைய அடுத்த வாரிசு மீதே அரசியல் கவனம் இருக்கும்.

திரு ஹெங், தம்முடைய தலைமைத்துவ பண்புகளுக்கு மெருகூட்டக்கூடிய திட்டவட்டமான வழியில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தலைமை தாங்கி நடத்துவாரா?

அடுத்த 10 ஆண்டு காலத்திற்குத் தங்களை வழி நடத்திச் செல்லக்கூடிய தலைவர் அவரே என்பது இந்த ஆண்டு முடிந்ததும் சிங்கப்பூரர்களுக்குத் தெள்ளத்

தெளிவாகத் தெரிந்திருக்குமா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் திரு ஹெங் எப்படி பதிலளிக்கப்போகிறார் என்பதை பொறுத்தே இந்த ஆண்டு அமையும்.

அரசியல் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட பாதையை நோக்கிச் செல்லும் நேரடிச் சாலையாக ஒருபோதும் இருக்காது என்பதால் இந்தப் பயணத்தில் திருப்பங்களை எதிர்பார்க்க முடியும்.

முடிவுகள் எப்படி இருந்தாலும் பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள ஒருவருக்கு இது தொடக்கமாக இருக்குமா அல்லது முடிவாக அமையுமா என்று இதை சிங்கப்பூரர்கள் பார்த்தால் அது ஒரு தவறாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

பிரதமர் கோ சோக் டோங் தாம் பிரதமர் ஆனதுமே 1991ஆம் ஆண்டில் முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார்.

மக்களிடம் வலுவான ஆதரவு தமக்கு கிடைக்கும் வகையில் அரசியல் களம் அருமையாக இருக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால் விளைவு வேறு மாதிரியாக ஆனது.

அவர் பதவி விலகிவிடுவார் என்றுகூட புரளிகள் கிளம்பின. இருந்தாலும் அந்தப் பின்னடைவை அவர் சமாளித்தார். அடுத்த தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று 14 ஆண்டுகள் பிரதமராகத் தொடர்ந்தார்.

தோல்வி அடைந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டால் இன்னும் வலுவான தலைமைத்துவம் அமைய அது வழிவகுக்கும்.

திரு ஹெங் புலப்படுத்தப்போகும் செயல்திறன் அளவுக்கு மக்கள் செயல் கட்சி நிறுத்தக்கூடிய புதிய வேட்பாளர்களின் ஆற்றல்களும் முக்கியமானவை.

அந்தப் புதுமுகங்களில் அரசாங்கம், தனியார் துறை பிரமுகர்கள் இடம்பெற்று அந்தக் குழு பன்மயக் குழுவாக இருக்குமா? அல்லது முன்னாள் அரசாங்க ஊழியர்கள், ராணுவத்தினர் ஆகியோரைக் கொண்ட அதே பழைய பாணி குழுவாக இருக்குமா?

இது மக்கள் செயல் கட்சிக்கு வழக்கமான ஒரு பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.

அமைச்சர் பொறுப்பு ஏற்கும் அளவிற்கு ஆற்றல்மிக்க ஆண்கள், பெண்களைத் தனியார் துறையில் இருந்து ஈர்க்க அதனால் முடியாமல் இருந்து வந்துள்ளது.

அரசியல் பணியில் உள்ளவர்கள் பொதுமக்களின் குறைகூறல்களுக்கு அடிக்கடி ஆளாகி வருவதாலோ என்னவோ, அரசியலில் நுழைதல் மக்களிடையே பிரபலமற்றதாகி போய் விட்டது என்று சொல்லலாம்.

அரசியல் தலைவர்களின் பணிகளைக் கூர்ந்து நோக்கும் இளம் சிங்கப்பூரர்கள் அரசியலில் சேரும் அளவிற்கு ஊக்கம் பெறுகிறார்களா? இது சிக்கலான பிரச்சினை என்றே நான் நினைக்கிறேன். இதற்கு எளிதான தீர்வு இல்லை.

2020ஆம் ஆண்டில் இளம் தலைவர்கள் இதில் முன்னேற்றத்தைச் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!