முரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்

மனிதன், கொடூரமான சிங்கம், புலிக்குப் பயந்து வலை கட்டிக்கொண்டு தூங்குவதில்லை.  அற்ப கொசுவுக்குப் பயந்துகொண்டுதான்  வலையைக் கட்டிக்கொண்டு  தூங்குகிறான். ஆனால் எந்த வலை, எந்த கேடயம் இப்போது பாதுகாப்பு கொடுக்கும் என்பது தெரியாமல் உலகமே பயந்து, நடுங்கி, குழம்பி நிற்கும் ஒரு நிலையை கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமிகள் ஏற்படுத்திவிட்டன.

குறிப்பாக பொருளியலுக்கும் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கும் கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கெனவே உலகப் பொருளியல் சரி யில்லை. உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்கா- சீனா இரண்டுக்கும் இடையில் வர்த்தகப் போர் காரணமாக இந்த ஆண்டு உலகப் பொருளியல் 2.9%தான் வளரும் என்று பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிறுவனம் முன்னுரைத்தது. 

ஆனால் கொரோனா தலை எடுத்து அதையும் கெடுத்துவிட்டது. உலகப் பொருளியல் வளர்ச்சி 1.5%தான் இருக்கும் என்று இப்போது அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 கொரோனா கைவரிசை பலதுறைகளையும் தழுவியதாக இருப்பதால் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மட்டும் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்பு S$291.8 பில்லியன் அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் நிதிச் சந்தைகளை, பங்குச் சந்தைகளை கொரோனா உலுக்கிவிட்டது.

போதாததற்கு, எல்லை கடந்து பரவும் கெரோனா நீண்டகாலத்துக்குக் கொடூர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியவந்து உள்ளது.  நிலவரம் இப்படி இருப்பதால் அதற்கு ஏற்ப உடனே, வேகமாக, விவேகமாக, வீரியமாக செயல்களில் இறங்கும்படி உலக நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

கொரோனா சுயரூபத்தை தெரிந்துகொண்டு விட்ட உலக நாடுகள், பொருளியல் கொள்கைகளை மாற்றத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்க மத்திய வங்கி அவசர அவசரமாக 0.5 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைத்தது. கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளும் ஹாங்காங்கும் இதேபோல வட்டி விகிதத்தைக் குறைத்தன.

சீனா, ஜப்பான் நாடுகளின் மத்திய வங்கிகள் பெரும் பணத்தை நிதிச் சந்தையிலும் பங்குச் சந்தையிலும் போட்டு நிலவரத்தைச் சமாளிக்க முழுமூச்சாக முயன்று இருக்கின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பலனாக நிதிச் சந்தைகள் ஓரளவுக்கு நிலைப்பட்டு இருக்கின்றன. 

இருந்தாலும் கொரோனாவின் கொட்டத்தை அடக்க மத்திய வங்கிகளால் மட்டுமே முடியாது என்று பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிறுவனம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்து இருக்கிறது.

வட்டி விகிதத்தைக் குறைப்பதால் கொரோனா தாக்கம் குறைந்துவிடாது என்று அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் பவல் கூட தெரிவித்து உள்ளார். 

இந்த வட்டி விகிதக் குறைப்புகள் எல்லாம் பொருளியலை நிலைப்படுத்துவதில் ஓரளவுக்குத்தான் பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஆகையால் கொரோனாவின் பொருளியல் பாதிப்புகளைக் குறைக்க, தவிர்க்கவேண்டுமானால் அதற்குத் துணிச்சலான, திட்டவட்டமான இலக்குகளுடன் கூடிய நிதிக் கொள்கைகள் தேவை. 

அத்தகைய கொள்கைகள்தான் சுகாதாரப் பராமரிப்புத்துறைக்கும் இப்போது கைகொடுக்கும் என்பதை உணர்ந்து பல நாடுகளும் பல அமைப்புகளும் நிதிக் கொள்கைகளைத் திருத்தி அமைப்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன.

சிங்கப்பூர், சீனா, தென் கொரியா, மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளும் ஹாங்காங்கும் கடந்த சில நாட்களில் தாராள நிதி நடவடிக்கைகளை அறிவித்து இருக்கின்றன. 

அமெரிக்க நாடாளுமன்றம் கூட கொரோனாவைச் சமாளிக்க US$8.3 பில்லியன் உதவித் திட்டத்தை நிறைவேற்றியது. அனைத்துலக பண நிதியம் அவசர உதவியாக US$50 பில்லியன் ஒதுக்கி வளரும் நாடுகளுக்கு உதவப்போவதாக அறிவித்து உள்ளது. அதேவேளையில், உலக வங்கியோ US$12 பில்லியன் உறுதி கூறி இருக்கிறது. 

இவை எல்லாம் இந்த அளவுக்கு முயற்சிகளை எடுத்தாலும், கொரோனாவின் முழு தாக்கத்தையும் இனிமேல்தான் உலகம் அனுபவிக்கப் போகிறது என்பதால் மேலும் பல முயற்சிகள் இதில் தேவை.  

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்பது இமாலயப் பணியாக இருக்கும்போல் தெரிகிறது.  அவசரகால ஆயத்தநிலையைப் பார்க்கையில், அமெரிக்காவில் கூட இன்னும் எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. வளரும் நாடுகள் இன்னும் போராட வேண்டி இருக்கும். 

கிருமி காரணமாக உற்பத்திகள் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மந்தமும் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கு கிறது. ஆகையால் நிதிச் சந்தைகளைத் தொடர்ந்து நிலைப்படுத்தி வரவேண்டும் என்பது அவசியமாகி இருக்கிறது. 

ஒருபுறம் சுகாதார நெருக்கடி, மறுபுறம் பொருளியல் நெருக்கடி என்று இருபுறமும் அடிவாங்கி வரும் இப்போதைய உலகம், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு ஒத்துழைப்புமிக்க, ஒற்றுமையான பெரும் முயற்சிகள் பல முனை களிலும் தேவை. 

இந்த நீண்ட நெடும் போராட்டத்தில் ஒரு வினாடியைக் கூட வீணடிக்க முடியாது. கொள்கைகளை வகுப்பவர்கள் இதில் முன் னின்று வழிகாட்டி உதவ வேண்டும். 

கொரோனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகம் முன்னேறிச் செல்லவேண்டும்.  கொரோனா விழித்துக்கொண்டு உள்ளபோது  உலகம் தூங்கிவிடக்கூடாது.