முரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்

விக்ரம் கன்னா, இணை ஆசி­ரி­யர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நாடா­ளு­மன்­றத்­தில் வியா­ழக்­கி­ழமை தாக்­கல் செய்த துணை வர­வு­செ­ல­வுத் திட்­டம் தனிச்­சி­றப்­பு­மிக்­கது மட்­டு­மல்ல, அதற்­கும் மேலா­னது. இருந்­தா­லும் அந்­தத் திட்­டத்­தின் வெற்றி, சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் தாங்­க­ளாகவே முன்­வந்து அளிக்­கும் ஒத்­து­ழைப்­பை­யும் ஒற்­று­மை­யை­யும் பொறுத்தே இருக்­கிறது. 

அந்­தத் துணை வர­வு­செ­ல­வுத் திட்­டம் எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பது பற்றி பல்­வேறு பகுப்­பாய்­வா­ளர்­களும் தொழில்­து­றைத் தலை­வர்­களும் அனு­மா­னித்து வந்த நிலை­யில்,  அள­வுக்கு அதிக எதிர்­பார்ப்­பு­களோ தொகை அள­வில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­வதோ முக்­கி­ய­மல்ல என்று நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட் வியா­ழக்­கி­ழமை ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்து இருந்­தார். 

இருந்­தா­லும் அமைச்­சர் வர­லாறு படைத்து இருக்­கி­றார். அந்த துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை ‘மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம்’ என்று திரு ஹெங் வர்­ணித்து இருக்­கி­றார். 

அந்­தத் திட்­டம் அதிகபட்­ச­மாக $30 பில்­லி­யன் வரை­தான் இருக்­கும் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் எதிர்­பார்த்து இருந்­தார்­கள். ஆனால் துணைப் பிர­த­ம­ரின் திட்­டம் அந்த எதிர்­பார்ப்­பு­களை எல்­லாம் கடந்து $48 பில்­லி­யன் அள­வுக்கு உயர்ந்து நிற்­கிறது. 

பொரு­ளி­யலை நிலைப்­ப­டுத்த ஒதுக்­கப்­பட்டு உள்ள மொத்த தொகை இப்­போது $55 பில்­லி­யன். சுதந்­தி­ரம் அடைந்­த­தற்­குப் பிறகு இது­தான் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வர­வு­செ­ல­வுத் திட்­டம். மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் இது 11 விழுக்காடு. இந்த அளவு, அமெ­ரிக்­கா­வின் நாடா­ளு­மன்­றம் நிறை­வேற்றியுள்ள S$3.1 டிரி­ல்லி­யன் திட்­டத்­தை­விட பெரி­யது என்­பது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கது.

மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் கார­ண­மாக மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 7.9 விழுக்­காடு ஒட்­டு­மொத்த பற்­றாக்­குறை ஏற்­படும் என்­ப­தும் புதிய ஒரு நில­வ­ரம்­தான்.  

இருந்­தா­லும், இந்­தப் பற்­றாக்­குறை பற்றி கவ­லைப்­பட இது நேரம் அல்ல. நெருக்­க­டி­யில் இருந்து மீண்டு வரு­வது பற்­றி­தான் இப்­போது யோசிக்க வேண்­டும். 

கொரோனா கிரு­மித்­தொற்று கொடூ­ரம், 1998ல் ஏற்­பட்ட ஆசிய நிதி நெருக்­கடி, 2008ல் ஏற்­பட்ட உலக நிதித்­துறை நெருக்­க­டியை எல்­லாம் மிஞ்­சி­விட்­டது. 

உற்­பத்­தி­யும் தேவை­களும் பாதிக்­கப்­பட்டு சிங்­கப்­பூ­ரில் மன­நிலை அதிர்ச்­சி­யும் ஏற்­பட்டு இருக்­கிறது. பொரு­ளி­யல் மந்­தம் நிச்­ச­ய­மா­கி­விட்­டது. எந்த அள­வுக்கு அது இருக்­கும் என்­ப­து­தான் கேள்­விக்­குறி. சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இந்த ஆண்டு 4 விழுக்­காடு வரை சுருங்­கி­வி­டும் ஆபத்தும் இருப்­ப­தாக முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.  

கொரோனா கிரு­மித்­தொற்று இன்­ன­மும் உலகை ஆட்­டு­விக்­கிறது. அது எப்­படி பரி­ண­மிக்­கும்,  எந்த அள­வுக்­குப் பொரு­ளி­யல் சேதா­ரத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பது எல்­லாம் நிச்­ச­ய­மா­கத் தெரி­ய­வில்லை. 

இந்த நிலை­யில், நிறு­வ­னங்­கள் தொடர்ந்து செயல்­பட வேண்­டும்; ஊழி­யர்­க­ளுக்கு வேலை போகா­மல் இருக்­க­ வேண்­டும்; வேலை தேடு­வோ­ருக்கு வேலை கிடைக்­க­ வேண்­டும்; குடும்­பங்­க­ளுக்­குப் போதிய ஆதா­ரம் இருக்க வேண்­டும் என்­பதை எல்­லாம் உறு­திப்­ப­டுத்­து­வ­து­தான் மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் நோக்­கம். 

வர­வு­செ­ல­வுத் திட்­டம் இவற்­றில் எல்­லாம் கவ­னம் செலுத்­து­கிறது. குடும்­பங்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் சுய­தொ­ழில் புரி­வோ­ருக்­கும் குறைந்த வரு­மா­னக்­கா­ரர்­க­ளுக்­கும் வேலை இல்­லா­தோ­ருக்­கும் வேலை தேடு­வோ­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் பயிற்சி பெறு­வோ­ருக்­கும் அந்­தத் திட்­டம் ஆத­ரவு அளிக்­கிறது. 

‘வேலை ஆத­ர­வுத் திட்­டம்’ என்ற ஒரு திட்­டத்தை, 2020 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஐந்து வாரங்­க­ளுக்கு முன் நிதி அமைச்­சர் அறி­வித்­தார். ஊழி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் சம்­ப­ளத்­தில் 8 விழுக்­காடு மானி­யம் அளிக்க அந்­தத் திட்­டம் வகை செய்­தது. இப்­போது புதிய துணை வர­வு­செ­ல­வுத் திட்­டம் மூலம் அந்த மானிய அளவு சம்­ப­ளத்­தில் குறைந்­த­பட்­சம் 25 விழுக்­காடு அள­வுக்கு உயர்­கிறது. 

உணவு, சேவைத் துறை­யில் 50 விழுக்­காடு, விமான மற்­றும் பயணத்துறை­க­ளுக்கு 75 விழுக்­காடு என அந்த மானி­யம் கிடைக்­கும். 

மொத்­தம் $15.1 பில்­லி­யன் அள­வுக்­குக் கொடுக்­கப்­படும் அந்த மானி­யங்­கள், நிறு­வ­னங்­கள் தொடர்ந்து செயல்­ப­ட­வும் ஊழி­யர்­கள் தொடர்ந்து வேலை பார்க்­க­வும் வழி­வ­குக்­கும். 

என்­றா­லும் நிறு­வ­னங்­கள் இதில் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று திரு ஹெங் வலி­யு­றுத்தி இருக்­கி­றார். இருந்­தா­லும் இதில் நிபந்­தனை எது­வும் நிறு­வ­னங்­க­ளுக்கு விதிக்­கப்­ப­ட­வில்லை. 

மானி­யத்தை வாங்­கிக்­கொண்டு ஆட்­கு­றைப்­பில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு மானி­யங்­கள்  குறைக்­கப்­பட வேண்­டும், அல்­லது நிறுத்­தப்­பட வேண்­டும். 

இந்த மானி­யங்­களை வேறு காரி­யங்­க­ளுக்கு நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­தக்கூடாது என்று நிபந்­த­னை­கள் விதிக்­கப்­ப­ட­வும் வேண்­டும். 

இதில் அர­சாங்­க­மும் தொழிற்­சங்­கங்­களும் விழிப்­பு­டன் இருந்து இத்­த­கைய தவ­றான காரி­யங்­க­ளைத் தடுக்­கும் என்று நம்­பு­கி­றோம். 

பொரு­ளி­யல் நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப சில துறை­கள் இப்­போது எதிர்­பார்ப்­ப­தை­விட இன்­னும் மோச­மான நில­வ­ரங்­க­ளை­யும் எதிர்­பார்க்­கக்­கூ­டும். 

பொரு­ளி­யல் மந்த நேரத்­தில் யாருக்கு லாபம், யாருக்கு நட்­டம் என்­பதை கணிப்­பது எளி­தா­னது அல்ல. ஆகை­யால் பொரு­ளி­ய­லில் என்ன நிகழ்­கிறது என்­ப­தற்கு ஏற்ப மானிய அள­வா­னது மாற்­றத்­திற்கு உட்­பட வேண்­டும். 

வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்­பெற்று இருக்­கும் இதர சில நட­வ­டிக்­கை­கள் எந்த அள­வுக்­குப் பலன் தரும் என்­பது நிறு­வ­னங்­கள் எப்­படி நடந்து கொள்­கின்­றன என்­ப­தைப் பொறுத்­த­தாக இருக்­கும். எடுத்­துக்­காட்­டாக, அலு­வ­ல­கம் அல்­லது தொழில்­துறை இடத்­தின் உரி­மை­யா­ளர் 30 விழுக்­காட்டு வரித்­தள்­ளு­ப­டி­யைப் பெறு­வார். 

ஆனால் அந்­தக் கட்­ட­டங்­களில் வாட­கைக்கு இருப்­போ­ர் பயன்பெறுவர் என்­ப­தற்கு எந்த உத்­தி­ர­வா­த­மும் இல்லை. 

வாட­கைக் கட்­ட­ணம் தொடர்­பான நிபந்­தனை ஏதே­னும் இடம்­பெற்­றால் இந்­தப் பிரச்­சி­னைக்கு தற்­கா­லி­க­மா­கத் தீர்வு காண­லாம். அதே நேரத்­தில் கட்­ட­டங்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் பல பொறுப்­பு­கள் இருக்­கின்­றன. 

அவர்­க­ளுக்­கும் கடன், அட­மா­னப் பொறுப்­பு­கள் இருக்­க­லாம். ஆகை­யால் வங்­கி­கள் கொஞ்­சம் நீக்­குப்­போக்­கு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்டு இருக்­கும் கடன்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அர­சாங்­கம் 80 விழுக்­காட்டு அள­வுக்கு உத்­தி­ர­வா­தம் வழங்கி இருக்­கிறது. 

இருந்­தா­லும் வட்டி விகி­தங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் கடந்த காலத்­தைப் போலவே வங்­கி­கள் நீக்­குப்­போக்­கு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்.

நிதி அமைச்­ச­ரின் மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் பிரம்­மாண்­ட­மா­னது, பர­வ­லா­னது. என்­றா­லும் கூட அதை இன்­ன­மும் சரிப்­ப­டுத்த வேண்­டிய தேவையை கொரோனா கிருமி நில­வ­ரம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். இதை மிகக் கவ­ன­மாக கவ­னித்து வர­வேண்­டிய அவ­சி­யம் இருக்­கும். 

அதற்கு இடைப்­பட்ட காலகட்­டத்­தில், நிதி அமைச்­சர் தாக்­கல் செய்­துள்ள திட்­டத்­தின் வெற்றி என்­பது, நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­கள், வங்­கி­கள், சுய­தொ­ழில் புரி­வோர், சுகா­தா­ரச் சேவை அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் நில­வும் ஒற்­று­மை­யை­யும் அவை தாங்­க­ளா­கவே முன்­வந்து அளிக்­கும் ஒத்­து­ழைப்­பை­யுமே பெரி­தும் சார்ந்து இருக்­கும். 

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டியிலிருந்து மீண்டு வரு­வது என்­பது அர­சாங்­கத்­திற்கு மட்­டும் உரிய பொறுப்பு அல்ல. அது சமூக பொது முயற்சி. 

இதை சிங்­கப்­பூ­ரர்­கள் சாதிக்க முடி­யும். அப்­ப­டிச் சாதித்து முடித்த பிறகு அவர்­கள் தங்­க­ளு­டைய கடந்த காலத்­தைத் திரும்பி பார்த்து இது­தான் மீட்­சித்­தி­றன் என்று கூற முடி­யும்.