அரசியலில் உயர் தரங்களைக் கட்டிக்காக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் சுதந்திரத்துடன் தனித்துவிடப்பட்டபோது அதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைவர்கள், நாட்டில் எந்த இயற்கை வளமும் இல்லை என்றாலும் சிங்கப்பூரை உலகில் தலைசிறந்த நாடாக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

அந்த இமாலய சாதனையைச் செய்து முடிக்க மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தங்களுக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்துகொண்ட தலைவர்கள், தங்கள் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட என்ன வழி என்று யோசித்தனர்.

கட்சித் தலைவர்கள், உலகம் போற்றும் நன்னெறிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்; நேர்மை மிக்கவர்களாக இருக்க வேண்டும்;

ஒளிவு மறைவு இல்லாத தலைவர்களாக, மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதவர்களாக இருக்க வேண்டும்;

லஞ்ச ஊழலை அறவே சகித்துக் கொள்ளாதவர்களாக, நன்னடத்தை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அத்தகைய ஆக்ககரமான மனப்போக்கு உள்ளவர்களைத் திரட்டி தங்களின் மக்கள் செயல் கட்சியைப் பலப்படுத்தி, மக்களின் ஆதரவுடன் அரும்பாடுபட்டார்கள்.

மக்கள் செயல் கட்சி, அரசியல், அரசாங்கம், கொள்கைகள், நாட்டு நிர்வாகம், அனைத்திலும் அவர்கள் இதே போக்கைக் கைக்கொண்டதால் விரும்பிய பலன்கள் கைக்கூடிவரத் தொடங்கின. மக்கள்-மசெக பிணைப்பும் மிக வலுவானது. அது ஒவ்வொரு தேர்தலிலும் பிரதிபலித்தது.

இயற்கை வளங்கள் இல்லாத ஒரு சிறு நாடாக சிங்கப்பூர் இருந்தபோதிலும் உலக அளவில் அதன் மதிப்பு கூடியது. சிங்கப்பூர் மீது உலகிற்கு நம்பிக்கை வலுவடைந்தது. உலகத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட சிங்கப்பூருக்கு அனைத்துலக முதலீடுகள் குவியத் தொடங்கின.

நாடு கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. பொருளியலாக இருக்கட்டும்; மக்களின் ஆயுளாக இருக்கட்டும்; வாழ்க்கைத் தரமாக இருக்கட்டும்; சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, கொவிட்- 19 கிருமித் தொற்றைச் சமாளித்த விதம் உள்ளிட்ட பல துறைகளாக இருக்கட்டும்; கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல் சிங்கப்பூர் குறுகிய காலத்திலேயே உலகம் வியக்கும் வகையில், பலரும் பொறாமைப்படும் வகையில் வளர்ச்சி கண்டது.

உலகமும் சமூகமும் பழிப்பதை வெறுத்து ஒதுக்குகின்ற, நன்னெறிகளைக் கடைப்பிடிக்கின்ற தலைவர்களோடு சேர்ந்து பாடுபட்டதன் பலன்களை மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக காணத் தொடங்கினர்.

தங்கள் நாடு சாதனை மேல் சாதனை படைப்பதை, ஆக்ககரமான முன்னேற்றம் கண்டு வருவதைக் கண்டு, கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிங்கப்பூர் சுதந்திர நாடாக ஆனது முதலே அரசியல் முறைகேடுகள் என்பவை இங்கு மிகமிக அரிது. மக்கள் அவ்வளவாகக் கேட்டறியாதவை.

இந்த நிலையில், சிங்கப்பூரை ஆட்சி புரிந்துவரும் மக்கள் செயல் கட்சி, தொடக்கம் முதலே தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ள மிக உயர்ந்த நேர்மைத் தரங்கள், அவற்றின் காரணமாக அந்தக் கட்சி அரசியலில் செலுத்தி வரும் ஆதிக்கம் குறைகிறதோ என்ற ஐயம் ஏற்படும் அளவுக்கு அண்மையில் வெளியாகி இருக்கும் செய்திகளைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது புரிந்துகெள்ளக்கூடிய ஒன்றுதான்.

நாடாளுமன்ற நாயகர் டான் ஜுவான்- ஜின் பதவி விலகி இருக்கிறார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினர்களில் ஒருவரான செங் லி ஹுவியும் பதவியைத் துறந்து இருக்கிறார். திரு டான்- திருவாட்டி செங் இருவருக்கும் இடையில் தகாத உறவு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

திரு டான் விவகாரத்தைப் பொறுத்தவரை, பிரதமர் லீ சியன் லூங், தானோ கட்சியோ அரசாங்கமோ நாடாளுமன்றத்தின் உயர் தரமும் நற்பெயரும் கெட அனுமதிக்கப்போவதில்லை, இத்தகைய செயல்களைச் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதைப் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோல், அமைச்சர் ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை முழு புலன்விசாரணைக்குப் பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்தப் புலன்விசாரணை இப்போது நடந்து வருகிறது.

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ரிடவுட் பங்களாக்களை வாடகைக்கு எடுத்த விவகாரம் பற்றி ஆதாரமில்லாத புகார்கள் தலைகாட்டியதை அடுத்து அந்த அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் புலன்விசாரணைக்கு உத்தரவிட்டார். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு புலன்விசாரணை நடத்தியது.

புலன்விசாரணை முடிவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி முழுமையாக விவாதிக்கப்பட்டன. இரு அமைச்சர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பல பிரச்சினைகள் தலைகாட்டியபோதிலும் நேர்மைத் தரங்கள்தான் முக்கியம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் அரசாங்கம் செயல்பட்டுள்ளது.

இதுவே சிங்கப்பூரர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருக்கத் தேவையான தார்மீக நன்னெறி என்பதை அரசாங்கம் மறுஉறுதிப்படுத்தி இருக்கிறது.

ஆகையால் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் மக்கள் செயல் கட்சியின் உயர் நேர்மைத் தரங்களுக்குச் சோதனைதான் வந்து இருக்கிறதே தவிர எந்த வகையிலும் அவை குறைந்துவிடவில்லை என்பது தெரிகிறது.

லஞ்ச ஊழலை அறவே சகித்துக்கொள்ளாமல், நேர்மை, நன்னடத்தைத் தரங்களை உறுதியாக கடைப்பிடிப்பது என்ற சிங்கப்பூரின் கொள்கைதான் உலக அளவில் அதற்கு நற்பெயரை ஈட்டித் தரும் மிகப்பெரிய அனுகூலமாக இருந்து வருகிறது.

இதுதான் சிங்கப்பூரின் செழிப்பாதாரமாக இருந்து வருகிறது. இத்தகைய நிர்வாக முறைக்குச் சோதனை வரலாம். ஆனால் அது பலவீனமாகிவிடக்கூடாது. பிரதமரின் உடனடி நடவடிக்கைகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!