கோதுமை ஒருபுறம், அரிசி மறுபுறம்; நீறுபூத்த நெருப்பாக பணவீக்கப் பிரச்சினை

பணவீக்கம் அதாவது விலைவாசிப் பிரச்சினை பல அம்சங்களைப் பொறுத்தது. கொவிட்-19 காரணமாக உலகமே முடங்கிப்போய் சேவை, பொருள் விநியோகக் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து பணவீக்கம் ஏறுமுகமானது. அது தணியத் தொடங்கிய நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததால் நிலைமை மேலும் மோசமானது.

இருந்தாலும் விலைவாசி கொஞ்சம் மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளூரிலும் உலக அளவிலும் இப்போது தெரியவந்துள்ளன.

என்றாலும் பணவீக்கப் பிரச்சினை இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவேதான் தொடர்ந்து இருந்து வருகிறது. பணவீக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. அது மேலும் அதிகரிக்கலாம் என்ற சூழலும் இல்லாமல் இல்லை.

பணவீக்கம் இரண்டு வகையில் கணக்கிடப்படுகிறது. ஒன்று ஒட்டுமொத்த பணவீக்கம். மற்றொன்று மூலாதாரப் பணவீக்கம்.

மூலதாரப் பணவீக்கம் என்பது தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவைச் சேர்க்காமல் கணக்கிடப்படுவது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஒட்டுமொத்த பணவீக்கம் 16 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து ஜூன் மாதம் 4.5% ஆக தணிந்தது.

அதே காலகட்டத்தில், மூலாதாரப் பணவீக்கம் 12 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து 4.2% ஆக இருந்தது. மூலாதாரப் பணவீக்கம் இந்த ஆண்டு முழுமைக்கும் 3.5% முதல் 4.5% வரைப்பட்டு இருக்கும்; அதேபோல் ஒட்டுமொத்த பணவீக்கம் 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என்பது அரசாங்கத்தின் கணிப்பாக இருக்கிறது.

இப்போதைய நிலவரங்களும் இதையே உறுதிப்படுத்துவதாகத் தெரிகின்றன.

உள்ளூர் நிலவரம் இப்படி எனில், உலக நிலவரங்களைப் பார்க்கையில் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 6.8% ஆகக் குறையும் என்றும் அடுத்த ஆண்டில் 5.2% ஆக அது மேலும் தணியும் என்றும் அனைத்துலக பண நிதியம் கணக்கிட்டு உள்ளது. பணவீக்கம் 2022ஆம் ஆண்டில் 8.7% ஆக இருந்தது.

பணவீக்கத்தைச் சமாளிக்க அமெரிக்காவின் மத்திய வங்கி 2022 மார்ச் முதல் பல தடவை வட்டி விகிதத்தைக் கூட்டியது. கடைசியாக கடந்த புதன்கிழமை 11வது முறையாக அது வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஐரோப்பிய மத்திய வங்கியும் தன் கொள்கைகளை மேலும் இறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவற்றின் ஆக்ககரமான தாக்கம் பணவீக்கத்தில் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ள பொருளியலைக் கொண்டுள்ள நாடுகளின் மத்திய வங்கிகள், பணவீக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதன் அளவு பெரும்பாலான நாடுகளில் 2% ஆக இருக்கிறது.

இந்த இலக்கு இப்போதைக்கு நிறைவேறுமா என்பது தெரியவில்லை. 2024ஆம் ஆண்டு முடிவில் அல்லது 2025 தொடக்கத்தில் இத்தகைய ஒரு நிலையை எட்டக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநர் பியா ஓலிவியர் கணித்து இருக்கிறார். 2% இலக்கை நிறைவேற்ற இயலாத சூழல் ஒருபுறம் இருக்கையில், பணவீக்கம் கூடும் என்பதற்கான வாய்ப்புகளும் தலைகாட்டி இருக்கின்றன.

குறிப்பாக உணவுப்பொருள்கள் விலை குறையும் என்று கணிக்க இயலாத சூழ்நிலை நிலவுகிறது. உலகில் கோதுமை ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தும் நாடு உக்ரேன். அதன் மீது படைஎடுத்து அதை ஆக்கிரமித்துக்கொண்ட ரஷ்யா, கருங்கடல் தானியத் திட்டம் என்ற ஓர் ஏற்பாட்டில் இருந்து ஜூலை 17ஆம் தேதி வெளியேறியது.

இந்த ஏற்பாட்டின்படி, ஒடெசா என்ற துறைமுகத்தின் மூலம் கோதுமையை உக்ரேன் ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்து வந்தது. இந்தத் துறைமுகத்தின் வழியாகத்தான் உக்ரேனின் 40% தானிய ஏற்றுமதி நடந்து வந்தது என்பது கவனிக்கத்தக்கது.

உடன்பாட்டில் இருந்து ரஷ்யா பின்வாங்கி விட்டதை அடுத்து ஒரே வாரத்தில் கோதுமை விலை 10%க்கும் மேலாகக் கூடிவிட்டது.

உக்ரேனின் வேளாண்மை கட்டமைப்புகளை நாசப்படுத்திவிட வேண்டும் என்று ரஷ்யா குறி வைத்துள்ளது. இது நடக்குமானால் கோதுமை விலை இன்னும் கூடிவிடும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. கோதுமை பிரச்சினை இப்படி என்றால் அரிசி பிரச்சினை அடுத்த பிரச்சினையாக தலை தூக்குகிறது.

கோதுமைக்கு உக்ரேன் என்றால் அரிசிக்கு இந்தியா. உலகின் மாபெரும் அரிசி ஏற்றுமதி நாடு இந்தியா.

உள்நாட்டில் பற்றாக்குறை காரணமாக இந்தியா ஜூலை 20ஆம் தேதி தனது 40% அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துவிட்டது. இந்தியா விதித்த தடை காரணமாக அரிசி விலை ஏறிவிட்டது. கோதுமை, அரிசி இரண்டும் மிக முக்கிய உணவுப்பொருள்கள்.

இவற்றின் விலை கூடிவிட்டதால் பணவீக்கம் அதிகரிக்கும். குறிப்பாக, அதிக அளவில் இவற்றைப் பயன்படுத்தும் ஏழை நாடுகளில் இது பளிச்சென்று தெரியும்.

கோதுமை, அரிசி ஒருபுறம் இருக்கட்டும்; பணவீக்கப் பிரச்சினைக்கு மேலும் ஒரு காரணமும் உண்டு. சீனாவின் பொருளியல் மீண்டும் சூடுபிடிக்க இருக்கிறது. பொருளியலை முடுக்கிவிட சீன அரசாங்கம் அண்மையில் பல அறிவிப்புகளை விடுத்துள்ளது. இதனால் எரிசக்தி, தாதுப்பொருள்கள் விலையும் கூடும் நிலை ஏற்படலாம்.

எண்ணெய் விலை ஏற்கெனவே மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குச் சென்ற மாதம் கிட்டத்தட்ட 15% கூடிவிட்டது.

ஐரோப்பாவில் அதிக ஊதியம் கேட்டு அதன் மூலம் ஊழியர்கள் தங்கள் கொள்முதல் சக்தியை பலப்படுத்திக்கொள்ள முயல்வதால் ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அனைத்துலக பண நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில் பணவீக்கப் பிரச்சினை இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதாகத் தெரிகிறது. அதை முற்றிலும் அணைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து போராட வேண்டி இருக்கும் என்றே தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!