பொருளியலையும் சமுதாயத்தையும் நிலைப்படுத்தும் திட்டம்

முரசொலி

பிப்ரவரி 16ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்த வரவுசெலவு திட்ட அறிக்கை பொருளியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும், அதேசமயம் சிங்கப்பூர் அரசின் நான்காம் தலைமைத்துவம் வகுத்துள்ள முற்போக்கான சமுதாயத் திட்டத்தின் அறிவுபூர்வ கலவையாகும்.

தனிநபர்கள், குடும்பங்கள், வர்த்தகங்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள செலவின் நெருக்குதலை தணிக்கும் விதத்தில் அந்த $131.4 பில்லியன் திட்டம் அமைந்துள்ளது.

அத்துடன், பணியிடைக்கால வாழ்க்கைத் தொழிலர்கள், குறைந்த வருவாய் ஊழியர்கள், முதியோர், தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள், உடற்குறையுள்ளோர் எனப் பலரையும் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கும் விதமாகவும் வரவுசெலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் உயர்நிலையில் இருந்தபோதும் இறங்கி வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு வாழ்க்கைச் செலவினத்துக்கான உதவி குறிப்பிட்ட கால அடிப்படையிலும் குறிப்பிட்ட அளவுக்குள்ளும் இருக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக அறிவிக்கப்பட்டுள்ள $1.3 பில்லியன் ஆதரவுத் தொகுப்பு பலன் தரும். அதில் 2024ஆம் ஆண்டு வரி மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள $40,000 உச்சவரம்புடன் கூடிய, 50% நிறுவன வருமான வரிக் கழிவு அந்த நிறுவனங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட உதவும் என்பதில் சந்தேகமில்லை.

இவற்றுடன் நிறுவனங்கள் நிதியுதவி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மேம்பட்ட தொழில்நிறுவன நிதியாதரவுத் திட்டம், தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதித் திட்டத்தின் மூலம் ஊழியர்களின் மறுபயிற்சித் திட்டத்துக்கு வழங்கப்பட உள்ள மானியம் ஆகியவையும் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆய்வு, வளர்ச்சி, உற்பத்தித்திறன், நிதித்துறை மேம்பாடு, பசுமைத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு நடைமுறை, விரிவலைக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி அனைத்து நிறுவனங்களுக்கும் பலன் தரும் விதத்தில் அமைந்துள்ளது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு 2025ஆம் ஆண்டு முதல் வரி உச்சவரம்பு 15% என அந்நிறுவனங்களுக்கு தெளிவான வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

மறுபயிற்சித் திட்டங்களின் முக்கியக் கூறாக, வேலைநீக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய 40 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம். மற்றவர்களைப் போல் அவ்வப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகையாக $500 பெறுவதற்குப் பதில், இந்தப் பிரிவினர் ஒருமுறை வழங்கப்படும் சிறப்புப் பயிற்சித் தொகையாக $4,000 பெறலாம்.

இதைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது வேலை தொடர்பில் ஏற்றம் தரக்கூடிய சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அத்துடன், அவர்கள் முழுநேரப் பயிற்சித் திட்டங்களில் சேர நேர்ந்தால், அவர்களுக்கு ஊதிய ஆதரவும் வழங்கப்படும்.

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவை ஒருபுறம் இருந்தாலும் அவற்றை சரிவரப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே அவற்றால் நலம் விளையும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவை நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று இருந்துவிட முடியாது.

இதற்கு எடுத்துக்காட்டாக, 2023ஆம் ஆண்டு இறுதிவரை 25 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூன்றில் ஒரு சிங்கப்பூரரே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிறப்புத்தொகையை பயன்படுத்தி உள்ளனர். 2023ஆம் ஆண்டு அக்டோபர்வரை மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேர தகுதியானவர்களில் 15 விழுக்காட்டினர் மட்டுமே தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள், நிறுவன நிதியாதரவுத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதில் அவை ஆலோசகர்களை நாடிச் செல்லும் நிலையும் உள்ளது. அவற்றைத் தொடர்புகொண்டு உதவுவது ஒருபக்கம், மறுபக்கம் பல்வேறு திட்டங்களும் நட்பார்ந்த முறையில் இருப்பதை உறுதிசெய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

அந்த நிலையில்தான் 2024ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தனது உயர்ந்த நோக்கத்தை எட்டிப் பிடிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!