முருகதாஸ் இயக்கத்தில் தீபிகா

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘கத்தி’யை தொடர்ந்து இந்தியில் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கினார் முருகதாஸ். இதில் சோனாக்‌ஷி சின்ஹா, ராய்லட்சுமி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் அடுத்து அஜித் படத்தை ஒன்றை இயக்கப் போவதுதாக கூறப்பட்டது. பிறகு, மகேஷ் பாபு படத்தை இயக்கப் போவதாக அவரே அறிவித்தார். இது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் தயாராகிறது.

இப்போது ‘பிரமோற்சவம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு. எனவே அடுத்த மாதம் புதுப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் மகேஷ்பாபு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிரடிப் படமாக உருவாக இருக்கும் இப்படத்துக்கான ஏற்பாடுகளில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.