சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர் - சேதுப;தி

அதிரடி (பஞ்ச்) வசனங்கள் பேசுவதுதான் மிகவும் கஷ்டமானது என்கிறார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, நடிகர் சிவகார்த்தி கேயனைத் தாம் போட்டியாகக் கருதவில்லை என்றும் சுற்றி இருப்பவர்கள்தான் இப்படியொரு போட்டி இருப்பதாகச் சித்திரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித் துள்ள படம் ‘றெக்க’. இப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டுள்ளார். “கடந்த வெள்ளிக்கிழமை ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இப்போது ‘றெக்க’ பாடல்கள் வெளியீட்டு விழா. இன்னும் இரண்டே வாரங்களில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது.

“நடப்பவற்றைப் பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. இப்படிப் படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம், நேரம் அப்படி அமைந்ததுதானே தவிர இவ்வளவு வேகமாகப் படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்துள்ளன. “ஆனாலும் என் படங்களை ரசித்து வரவேற்ற ரசிகர்களுக்கும் ஊக்கம் தந்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன், முடியுமா எனத் தயங்கினேன். இதில் நடிக்க முடியுமா என்று எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன. ஆனால் சிவா கதை சொன்ன விதம், வசனம் பேசிக் காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

“இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன் வந்த கணேசுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘அதிரடி வசனங் கள்’ பேசுவதற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இயக்குநர் சிவா ஒரு நடிகனின் மனநிலையைப் புரிந்துகொண்டு காட்சிகளை அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார். “லட்சுமி மேனனுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் கலகலப்பாக வருகிறார். “இந்தப் படத்தில் ‘மான்கராத்தே’ சிவ கார்த்திகேயனைப் போல் நான் போஸ் கொடுத்திருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவாவை நான் போட்டி யாகக் கருதுவதாகவும் கூறியுள்ளனர்.

“உண்மையில் எனக்கும் சிவாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரை நான் போட்டியாகக் கருதவில்லை. அவரும் அப்படிப்பட்ட மனநிலையில்தான் உள்ளார். அவர் எனக்கு நல்ல நண்பர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்