கல்லூரி மாணவியாக ஜனனி

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்கிற பலமான பின்னணியோடு களமிறங்கி இருக்கிறார் இயக்குநர் விஜய்பாஸ்கர். படத்தின் தலைப்பு சும்மா அதிருது என்கிற வகையில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ‘விதி மதி உல்டா’ என்பதுதான் அந்தத் தலைப்பு. உங்களைப் பற்றி?

“ஈரோடு என் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு முடித்த கையோடு திருப்தியடைந்து விட்டேன். உடனே ரயில் ஏறி சென்னை புறப்பட்டுவிட்டேன். எடிட்டிங் கற்றுத் தரும் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. அங்கே இருந்தபோது கிடைத்த தொடர்புகள் மூலமாகத்தான் முருக தாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர வாய்ப்பு கிடைத்தது. “அதன் பிறகு ‘கஜினி’ (இந்தி), ‘ஏழாம் அறிவு’ எனச் சில படங்களில் அவரிடம் வேலை பார்த்தேன். ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றதும் தனியாக வந்து முயற்சி செய்து இப்போது இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். வித்தியாசமான தலைப்பாக உள்ளதே?

“இந்தப் படத் துக்கு ‘உல்டா’ என்றுதான் முதலில் தலைப்பு வைத்தேன். அது அரபி மொழி வார்த்தை. வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சினை வரும் என்று சிலர் கூறினர். அதன் பிறகுதான் ‘விதி மதி உல்டா’ என மாற்றினோம். என்ன கதை?

“இது எதிர்மறை நகைச்சுவையைக் களமாகக் கொண்ட கதை. ஒருவகையில் வழக்கமான கதை என்றும் சொல்லலாம். சில விஷயங்கள் இப்படித்தான் நடக்கும் என நாம் யூகிப்போம். ஆனால் அது நடக்காமலேயே கூட போய்விடும். சில விஷயங்கள் நடக்கவே நடக்காது என்று நினைப்போம். அவை நடந்துவிடும். “இப்படி நம் மனசுக்கும் வாழ்க்கை நடப்புக்குமான இந்தப் போட்டியைத்தான் அலசியுள்ளேன். இதற்கும் மேலே கதையைச் சொன்னால் படம் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஏதோ தத்துவார்த்தமாகச் சொல் வது போல் தோன்றும். ஆனால் திரைக்கதை ரசிகர்களை நிச்சயம் கவரும். நாயகன்?

“இந்தக் கதைக்கு கதாநாயகனே தேவைப் படவில்லை. துருதுருவென உள்ள ஒரு பையன்தான் தேவை. ஆதித்யா என்கிற அந்த பாத்திரத்துக்கு ரமீஸ் ராஜா கச்சிதமாகப் பொருந்தினார். ஏற்கெனவே ‘டார்லிங் 2’ல் நடித்தவர். அமைதியான மனிதர். பக்கத்து வீட்டு பையனின் தோற்றத்துக்குப் பொருந்துகிறார். ஜனனி ஐயர்?

“அவர்தான் கதாநாயகி. மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்கக் கூடிய நல்ல நடிகை. திவ்யா என்கிற கல்லூரி மாணவி வேடத்தில் நடித்துள்ளார். வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லிக் கொண்டு அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். அவரது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புத் தரக்கூடிய கதாபாத்திரம் இது. அதைப் புரிந்து கொண்டு இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி உள்ளார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். டேனியல் பாலாஜி?”

“நான் உதவி இயக்குநராக இருந்தபோதே அவர் பரபரப்பாக பல படங்களில் நடித்து வந்தார். அப்போது அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அவரது கதாபாத்திரம் என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்,” என்கிறார் இயக்குநர் விஜய்பாஸ்கர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்