‘றெக்க’யில் சிறகடித்துப் பறக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் வெற்றிப்பட வரிசையில் இணைந்திருக்கிறது ‘றெக்க’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் இணைந்து நடித்திருக்கிறார்கள். பிரபல தாதாவான கபீர் சிங்கின் ஆட்கள் மற்றொரு ரவுடியான ஹரிஷ் உத்தமனின் தம்பியைக் கொலை செய்து விடுகிறார்கள். அதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன், கபீர் சிங்கை பழிவாங்க நேரம் பார்த்துக் காத்திருக்கிறார். அதன்பிறகு கதை 6 மாதத்திற்கு பின்னோக்கி நகர்கிறது.

காதலர்களைச் சேர்த்து வைப்பதைத் தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, ஒருமுறை ஹரிஷ் உத்தமனுக்கு நிச்சயமான பெண்ணுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்றுவிடுகிறார். அதனால் ஹரிஷ் உத்தமன், விஜய் சேதுபதி மீது கோபத்தில் இருக்கிறார். அவரையும் சமயம் பார்த்துப் பழிவாங்க காத்திருக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் தங்கைக்குத் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. அப்போது விஜய் சேதுபதிபதியை ஒரு பிரச்சினையில் சந்திக்கும் ஹரிஷ் உத்தமன் மதுரையில் பெரிய அரசியல்வாதியின் பெண்ணான லட்சுமி மேனனைக் கடத்தச் சொல்கிறார். அப்படி அந்த வேலையைச் செய்யாவிட்டால் தங்கையின் திருமணத்தில் பிரச்சினை செய்வதாகக் கூறுகிறார். அதே நேரத்தில் லட்சுமி மேனன், கபீர் சிங்கை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருப்பார். தங்கையின் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுவதை விரும்பாத விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமன் சொன்ன வேலையைச் செய்ய முடிவெடுக்கிறார்.

அங்கிருந்து லட்சுமி மேனனைத் திரும்பியதா? என்பதே மீதிக்கதை. ‘சேதுபதி’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு ‘மாஸ்’ படம் இது. இப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும்படியான காட்சிகளில் அசால்ட்டாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அதே நேரத்தில், லட்சுமி மேனனுடன் காதல் காட்சிகள், வசனங்கள் உச்சரிப்பு எனத் தனக்கே உரித்தான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. பின்னணி இசையில் இமான் அதிரடி கூட்டியிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. மொத்தத்தில் ‘றெக்க’ படம் பார்த்தவர்கள் ‘றெக்க’ இறக்கைக் கட்டிப் பறக்கும் என்கின்றனர்.

Loading...
Load next