ஆஸ்திரேலியாவில் ‘ரெமோ’ வெற்றியைக் கொண்டாடுகிறார் சிவகார்த்திகேயன்

ஒளிப்பதிவுக்குப் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவுக்கு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி எனத் தொழில் நுட்பக் கலைஞர்களிலும் முதன்மையானவர்களைக் கொண்ட படமாக ‘ரெமோ’ விளங்கியது. வெளியீட்டிற்கு முன்பாக அதிகப்படியான விளம்பரங்கள் கொஞ்சம் அச்சத்தைக் கொடுத்தன. அதேபோல படம் வெளி வந்ததும் விமர்சனங்கள் வேறு அதை மேலும் அதிகமாக்கியது.

இருந்தாலும் அனைத்தையும் மீறி ‘ரெமோ’ படம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்தின் வசூல்தான் அதிகமான வசூல் என்கிறார்கள். மிகப் பெரும் செலவு, முதன்மை தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும் எதிர்பார்த்த அளவிற்குப் படம் இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.

காதல் அதிகமாகவும் நகைச்சுவைக் குறைவாகவும் இருந்ததாக அனைவரும் ஒரே மாதிரியான கருத்துகளைத் தெரிவித்தார்கள். ஆனாலும் வளர்ந்து வரும் நேரத்தில் தைரியமாக பெண் வேடத்தில் நடிக்க முயன்ற அவரது மன தைரியத்தை ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.

மும்முனைப் போட்டியாக ‘தேவி, றெக்க’ படங்களுடன் வெளிவந்த ‘ரெமோ’ வசூலைப் பொறுத்தவரையில் முதலிடத்தில் உள்ளதாம். ‘தேவி’ படம் இரண்டாவது இடத்திலும் ‘றெக்க’ படம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். ‘ரெமோ’ வெற்றி மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்