கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

பொதுவாக வடக்கில் இருந்து கோடம்பாக்கம் வரும் இளம் நாயகிகளைத் தமிழ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். அதேசமயம் நடிப்பிலோ, கவர்ச்சியிலோ குறை வைத்தால் ஒதுக்கி விடுவார்கள். 

நக்மா, குஷ்பு என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல் சற்று நீளமானது. அந்தப் பட்டியலில் தற்போது இடம்பிடித்துள்ளார் கஷ்மீரா பர்தேசி. 

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இவர். முதல் படத்திலேயே ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்தது தனக்கு மகிழ்ச்சி தந்திருப்பதாகச் சொல்கிறார் கஷ்மீரா.

“இயக்குநர் சசி மிகத் திறமையான இயக்குநர் என்று நான் சான்றிதழ் தரவேண்டியதில்லை. அவரது படங்களே அவரது திறமைக்குச் சாட்சி. 

“தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தற்போது பிற மொழி நடிகைகளிடம் அதிகரித்து வருகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல,” என்று சொல்லும் கஷ்மீரா அடிப்படையில் நல்ல ஆடை வடிவமைப்பாளராம்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் என்றால், தற்போது நடிப்புத் தொழிலுக்காக நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.

“மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் வடிவமைப்பு குறித்துப் படித்தேன். இரண்டு ஆண்டுப் படிப்பை முடிப்பதற்குள் மாடலிங் வாய்ப்புத் தேடி வந்தது. படிப்பில் கெட்டிக்காரி என்று பெயரெடுத்தவள், நடிப்புத் துறையிலும் சாதிக்க விரும்பினேன். 

“ஆனால், என் வீட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. எப்படியோ வீட்டில் உள்ளவர்களைச் சமாளித்து நடிப்பதற்கு அனுமதி பெற்றேன்,” என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் கஷ்மீரா.

தமிழ் சினிமா துறையில் அனைவரும் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவதாகக் குறிப்பிடுபவர், தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார். ‘பிச்சைக்காரன்’ படத்தின் தெலுங்கு பதிப்பைப் பார்த்தபிறகு சசி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம். தனது விருப்பம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லையாம்.

“நடிப்புத் தேர்வுக்காக ஹைதராபாத்தில்இருந்து சென்னைக்கு வந்தேன். பதற்றமில்லாமல் நடியுங்கள் என்று முதல் நாளே என்னை அன்பாக அமைதிப்படுத்தினார் இயக்குநர் சசி. அதன்பிறகு படப்பிடிப்புக்கு முன்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதற்காக அடிக்கடி சென்னை வந்தேன். 

“ஜி.வி. பிரகாஷ் மிகவும் நட்பாகப் பழகினார். நான் சில சமயங்களில் படபடப்பாக இருந்தாலும் ஏதேனும் நகைச்சுவைகள் சொல்லி என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவார் ஜி.வி.

டோலிவுட் போன்றுதான் கோடம்பாக்கத்தில் செயல்படுகிறார்கள். எனினும் தெலுங்கை விட எனக்குத் தமிழில் அதிக நண்பர்கள் உள்ளனர்,” என்கிறார் கஷ்மீரா. 

இந்த இளம் நாயகிக்குப் பயணம் மேற்கொள்வது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். ஓய்வு நேரங்களில் ஓவியங்கள் தீட்டுவதுதான் இவரது முக்கியப் பொழுதுபோக்கு. 

தனது செல்ல நாய்க்குட்டிக்கு ஷிரோ என்று  பெயர் சூட்டியுள்ளார். வீட்டில் இருந்தால் அதனுடன் விளையாடுவதற்கும் கணிசமான நேரத்தை ஒதுக்குகிறார்.

“மற்றபடி ஷாப்பிங் செல்லப் பிடிக்கும். அந்தச் சமயத்தில் மீண்டும் கல்லூரி மாணவியாகவே மாறிவிடுவேன். அதிலும் சாலையோரக் கடைகளில் பொருட்கள் வாங்குவது என்றால் உற்சாகமாகி விடுவேன். அந்தச் சமயத்தில் என்னை அடியோடு மாற்றிவிடும் சக்தி அந்தக் கடைகளுக்கு உண்டு. 

“உலர்பழங்கள் சாப்பிடுவது என்றாலும் எனக்குப் பிடிக்கும். அவைதான் எனது காலை உணவு,” என்று சொல்லும் கஷ்மீரா தெலுங்கிலும் தமிழிலும் தலா ஒரு படத்தில் நடித்த கையோடு இந்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளார்.