காதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்

காதலன் தன்மீது திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார் அளித்துள்ளார். 

தமிழில் ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்து பிரபலமானவர் அஞ்சலி அமீர்.

திருநங்கையான இவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாகத் தயாராகிறது. 

இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கதறி அழுதபடி அஞ்சலி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். 

அதில், “ஒருவருடன் நான் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது என் காதலருடனான உறவை முறித்துக்கொள்ள முடிவு எடுத்தேன். அவரோ தன்னுடன் தொடர்ந்து வாழும்படி சித்திரவதை செய்கிறார்.

“திராவகம் வீசி கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார். 

“நான் சேமித்த பணத்தில் இருந்து கடந்த இரண்டு  ஆண்டுகளில் ரூ.4 லட்சம்வரை பறித்துக்கொண்டார். அவரது தொல்லைகளை என்னால் தாங்க முடியவில்லை. 

“இதனால் உயிரை விட்டு விடும் மனநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்,” என்று பேசியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியதை       அடுத்து அஞ்சலி அமீரின் காதலர் அனஸ் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “அஞ்சலி அமீர் மீது ஆசிட் வீசுவதாக நான் மிரட்டவில்லை. இரண்டு வருடங்களாக நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். அவருக்கு நான் உதவியாகவே இருந்தேன். இப்போது சிலரின் தவறான ஆலோசனையின் பேரில் இப்படி குற்றம் சொல்கிறார். அவருக்கு விருப்பம் இல்லையென்றால் என்னை விட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம்,” என்றார்.