அருண்ராஜா: சரியான நேரம் நிச்சயம் வரும்

விஜய்யிடம் தாம் கதை சொன்னது உண்மைதான் என்றும் எனினும் அந்தக் கதையைத் திரைப்படமாக்க இது சரியான நேரமில்லை என்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநரானவர் இவர். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் வித்தியாசமான ஒரு கதையை இவர் சொல்லி இருப்பதாகவும் விரைவில் அந்தப் படத்துக்கான வேலைகள் துவங்கும் என்றும் தகவல் வெளியானது.

எனினும் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

அதில் விஜய்யை வைத்து தாம் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான சரியான நேரம் நிச்சயம் வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அது ஒரு நல்ல அனுபவம். ஏனென்றால் விஜய் சாருக்கு கதை சொல்லக்கூட நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவரை வைத்து படம் இயக்குவது சாதாரண விஷயம் அல்ல.

“அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது அவர் என் தோள்களின் மீது கைவைத்து ‘என்ன நண்பா, எப்போது படப்பிடிப்புக்குப் போகிறோம் என்று கேட்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இதற்கிடையே திரைப் பாடல்கள் எழுதுவதையும் இவர் விட்டுவிடவில்லை. புதுப்படம் இயக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம்.

மேலும், ‘கன்னக்குழி அழகே’ என்ற தனிப்பாடலை எழுதி, காணொளியாகவும் வெளியிட்டுள்ளார்.

“இதுபோன்ற தனிப்பாடல்களை வெளியிடும் யோசனை நீண்ட காலமாக என் மனதில் இருந்தது. சினிமாவில் பணியாற்றத் தொடங்கிய பிறகு இதற்கான முயற்சிகளை தொடர முடியவில்லை.

“இப்போது ஊரடங்கு வேளையில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி இந்தப் பாடலை எழுதினேன். எனினும் காணொளிப் பதிவில் யாரும் நடிக்கவில்லை.

“வெறும் பாடல் வரிகள் மட்டுமே திரையில் தோன்றும். ஊரடங்கு முடிந்த பிறகு முழுமையான காணொளி வெளியாகும். விஜய் யேசுதாசும் சவனீ ரவீந்திராவும் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

“புரூஸ் லீ’ படத்தின் ஒரு பாடலுக்கும் பிரபுதேவா சாரின் ‘பஹிரா’ படத்துக்கும் இசையமைத்துள்ள கணேசன் சேகர்தான் இந்தப் பாடலுக்கும் இசையமைத்துள்ளார். அவரும் பல தனிப்பாடல்களை வெளியிட்டுள்ளார்,” என்று உற்சாகத்துடன் தனது பாடல் குறித்து விவரிக்கிறார் அருண்ராஜா காமராஜ்.