தொண்டூழியர்களை சிறப்பித்த கொண்டாட்டம்

இவ்வாண்டு 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்து அறக்கட்டளை வாரியம் அதன் தொண்டூழியர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் சிறப்பு குடும்ப தினத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

வழக்கமாக இந்து அறக்கட்டளை வாரிய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் நான்கு ஆலயங்களின் தொண்டூழியர் அங்கீகரிப்பு நிகழ்ச்சிகள் அந்தந்த ஆலயங்களின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெறும். 

பொன் விழாவை முன்னிட்டு அனைத்துத் தொண்டூழியர்களும் ஒன்றுசேர்ந்து மகிழும் வகையில் இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இரவில் விலங்கியல் தோட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ’ரேன் ஃபோரஸ் லுமினா’ எனும் காட்டுப் பகுதி வழியே மெய்நிகர் விலங்குகளைக் காண தொண்டூழியர்களுக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. 

குடும்பத்தோடு விலங்குகளைப் பார்த்ததோடு அதிர்ஷடக் குலுக்கில் மின்னியல் சாதனங்களையும் சில தொண்டூழியர்கள் பரிசாகத் தட்டிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் நீண்ட காலமாக வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயில்களில் சேவையாற்றும் 72 தொண்டூழியர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர்.ஜெயச்சந்திரனிடம் இருந்து விருது பெறும் திருமதி ராஜாஅழகி
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர்.ஜெயச்சந்திரனிடம் இருந்து விருது பெறும் திருமதி ராஜாஅழகி

குறைந்தது 20 ஆண்டுகள் சேவையாற்றியவர்களுக்கு உன்னத விருதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியவர்களுக்கு சாதனை விருதும் வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடக்க திரு வி.கோபால் நாயுடு போன்ற தொண்டூழியர்களின் பங்கு இன்றியமையாதது. தீக்குழியை உருவாக்கும் பொறுப்பினை இவர் ஏற்றுள்ளார். இந்த சேவையை அவர் கடந்த 36 ஆண்டுகளாக ஆற்றி வருகிறார்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றி, பக்தர்கள் திருப்தியுடன் வீடு திரும் புவதுதான் ஆண்டுக்காண்டு இத்திருவிழாவில் பங்களிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுப்பதாகத் துப்பரவுத் துறையில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் 64 வயது திரு கோபால் கூறினார்.

உன்னத விருது பெற்ற திரு கோபால் இத்தகைய அங்கீகரிப்பு இளையர்களையும் தொண்டூழியத்தில்  ஈடுபட உற்சாகம் கொடுக்கும் என்றார்.

கடந்த 27 ஆண்டுகளாக சிங்கப்பூரில் எந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடந்தாலும் தவறாது சென்று தொண்டூழியம் புரிபவர் திருமதி மெ.ராஜாஅழகி. 

நடமாடச் சிரமப்படும் முதியவர்களை அமரவைத்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது, பக்தர்களுக்குக் கொடுக்கும் அன்பளிப்புப் பைகளை நிரப்புவது, உணவு பரிமாறுவது என மும்முரமாக ஒரு வாரத்திற்கு தம்மால் இயன்ற பணிகளை ஆற்றுவார்.

“எப்போதும் கோயிலுக்குச் செல்லும் நான், அவ்வப்போது சிறுசிறு தொண்டுகள் செய்வேன். நாளடைவில் பெரிய விழாக்களில் பங்களிக்க ஆர்வம் முளைத்தது. மக்களுக்குச் செய்யும் தொண்டினை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக கருதுகிறேன்,” என்றார் இல்லத்தரசி திருமதி ராஜாஅழகி, 62.

ஸ்ரீ சிவன் கோயிலில் சிவராத்திரி விழா போன்றவற்றிலும் இவர் தொண்டுபுரிகிறார். சிவராத்திரி அன்று 1,008 பால் குடங்களை ஏற்பாடு செய்வதில் இவர் ஈடுபடுகிறார். தமது ஈடுபாட்டைப் பார்த்து, தமது மகளும் மருமகனும் சிவராத்திரி விழாவில் தொண்டூழியம் புரிய ஒவ்வோர் ஆண்டும் வந்துவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

தொண்டூழியர்கள் ஓய்வு நேரத்தில் கோயிலில் சேவை புரிவதற்கு அவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் முக்கியமானது. 

இப்படி ஒட்டுமொத்த குடும் பத்தினரின் பங்கினைக் கருதி இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்தார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர்.ஜெயச்சந்திரன்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர்.ஜெயச்சந்திரனிடம் இருந்து விருது பெறும் திரு வி.கோபால் நாயுடு. படங்கள்: த.கவி.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர்.ஜெயச்சந்திரனிடம் இருந்து விருது பெறும் திரு வி.கோபால் நாயுடு. படங்கள்: த.கவி.

“கோயிலில் முக்கிய விழாக்கள் நடந்தால், அதனை தொண்டூழியர்களின் உதவியில்லாமல் நடத்தவே இயலாது. வாழ்வில் நல்ல பண்பு நலன்களை வளர்த்துக்கொள்ளும் தளமாகவும் ஆலயங்கள் விளங்குகின்றன. அவ்வகையில் தொண்டூழியர்களாகச் சேர இன்னும் கூடுதலான இளையர்கள் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்றார் திரு ஆர்.ஜெயச்சந்திரன்.

பொன் விழா கொண்டாட்டங்கள் இன்னும் தொடரும் என்று குறிப்பிட்ட திரு ஜெயச்சந்திரன், வரும் மாதங்களில் சுகாதார விழா, கல்வி உபகாரச் சம்பளம், உதவி நிதி விருது நிகழ்ச்சி போன்றவற்றைப் பெரிய அளவில் நடத்த திட்டம் உள்ளது என்றார்.

இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு ஆதரவு வழங்கும் முக்கிய பங்காளிகளில் ஒன்றான மோல்மின் = கேர்ன்ஹில் குடிமக்கள் ஆலோசனைக் குழு வாரியத்தின் தோழர் விருதினைப் பெற்றது.

விலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். 

 

 

Read more from this section

“இயற்றமிழ் விருது” பெற்ற திரு பி.சிவசாமி (இடமிருந்து மூன்றாவது). படம்: திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்

13 Oct 2019

தனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா

போட்டியில் பங்கேற்று வென்ற குழு. படம்: சன்லவ்

13 Oct 2019

துடிப்பான முதுமைக்காலத்தைக் கொண்டாடிய மூத்தோர் விளையாட்டு தினம்