‘பி.கிருஷ்ணன் நம் நாட்டின் பொக்கிஷம்’

ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடக தமிழாக்கங்களில் பி.கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பே தலைசிறந்தது. இதற்கு ஈடான மொழிபெயர்ப்பு எதுவும் இல்லை என்று இந்தியாவின் இந்து நாளிதழ் கூறியிருந்தது.

சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரான பி.கிருஷ்ணன் நம் நாட்டின் பொக்கிஷம் என்று கொண்டாடினார் நாடகக் கலைஞரும் வழக்கறிஞருமான திரு வடிவழகன்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்ற ‘உலக இலக்கியத்தை சிங்கப்பூர்த் தமிழர்களிடம் சேர்த்த பி.கிருஷ்ணன்’ என்ற அமர்வில் பேசிய திரு வடிவழகன், திரு பி.கிருஷ்ணனை பொக்கிஷமாகப் போற்ற வேண்டியதன் காரணத்தை தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதன் மூலம் விளக்கினார்.

பி. கிருஷ்ணனின் மெக்பெத் மொழிபெயர்ப்பை மேடை நாடகமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரித்தபோது அது நிறைவளித்த கடும் உழைப்பாக இருந்தது என்றார் அவர்.

“ஷேக்ஸ்பியரின் ஆங்கில கவிதைகளில் இடம்பெற்றுள்ள சொற்களின் மாத்திரை (மீட்டர்) அளவுக்கு ஈடாக தமிழில் எழுதியிருக்கிறார். அதுவும் மரபுக் கவிதைகள். அதைப் படிக்கவே எனக்கு பல நாட்கள் ஆனது. அகராதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு வாசித்துப் புரிந்துகொண்டேன். 

“எப்படி மனப்பாடம் செய்து நடிப்பது என்று நடிகர்கள் முதலில் பயந்தார்கள். ஆனால், ஓசை நயத்தோடு திரு கிருஷ்ணன் எழுதிய கவிதைகள்  நடிகர்களின் மனதில் எளிதாகப் பதிந்துவிட்டன. பொருள் புரியாவிட்டாலும் ஏற்ற இறக்கத்துடன் நடிகர்கள் பேசிய அந்த கம்பீரத் தமிழை பார்வையாளர்கள் மிகவும் ரசித்தனர். மூன்று நாள் காட்சிகளின்போது அரங்கமே நிறைந்திருந்தது. மீண்டும் மூன்று நாட்கள் மேடையேற்றினோம்,” என்று கூறினார். அத்துடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்னர் மேடையேறிய அந்நாடகக் காட்சிகளையும் ஒளிபரப்பினார்.

தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ளவும், நல்ல தமிழைப் பேசவும் இத்தகைய நாடகங்கள் உதவுகின்றன. இலக்கிய அனுபவத்தை எல்லாருக்கும் வழங்குகின்றன. நாடகத் துறையில் மக்களுக்குள்ள இயற்கையான ஆர்வத்தை, தமிழ் மொழியின் பக்கம் ஈர்ப்பதில் இத்தகைய இலக்கிய மொழிபெயர்ப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றார் அவர்.

சிறு வயதில் பி.கிருஷ்ணன் எழுதித் தயாரித்த சிறுவர் நாடகங்களில் நடித்ததன் மூலம் தமது தமிழ் வளமும் ஆர்வமும் வளர்ந்ததுடன் நாடகக் கலையில் ஈடுபாடும் ஏற்பட்டதாக திரு வடிவழகன் கூறினார்.

பி.கிருஷ்ணனின் விலங்குப்பண்ணை மொழிபெயர்ப்பு பற்றி பேசிய திரு அருள் ஓஸ்வின், ஆங்கிலத்தில் 100 பக்கத்தில் இருந்ததை 500 பக்கத்துக்கு அழகாக எழுதியிருக்கிறார் என்றும் கதாபாத்திரங்களை விரிவுபடுத்தியதுடன் எல்லா மிருகங்களையும் பேச வைத்து, எல்லாவற்றுக்கும் உரிமை கொடுத்துள்ளார் என்றும் பகிர்ந்துகொண்டார். மொழிபெயர்ப்பு என்பதைவிட தமிழில் அது ஒரு மறுஉருவாக்கம் எனலாம் என்றார் பொறியாளரான அருள் ஓஸ்வின்.

இன்னும் வெளிவராத திரு கிருஷ்ணனின் ‘மன்னர் லியர்’ மொழியாக்கத்தை வியந்து பேசிய மற்றொரு பேச்சாளரான குமாரி அஸ்வினி செல்வராஜ், நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் தமிழ் வாசகர்களுக்கு, தமிழ் கலாசாரத்துடன் தொடர்பு படுத்தக்கூடியதாக உள்ளது என்றார்.

திரு பி.கிருஷ்ணன் ஷேக்ஸ்பியரின் மேலும் ஐந்து நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். வெளியிடப்படாத இம்மொழி பெயர்ப்புகளில் இருந்த சில காட்சிகளின் வாசிப்பும் நிகழ்வில் இடம்பெற்றது.

1950களின் இறுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் வானொலி மூலம் தமிழ் இலக்கியத்துடன் உலக இலக்கியங்களை சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, பரந்துபட்ட இலக்கிய அறிமுகத்தை ஏற்படுத்திய இந்நாட்டு எழுத்தாளர்களுள் முக்கியமானவர் திரு பி.கிருஷ்ணன்.

பல தலைமுறைகள் நல்ல தமிழைப் பேசவும் அறிந்துகொள்ளவும் இவரது நாடகங்கள் உதவியுள்ளன.

புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் கலாசார பதக்கம்பெற்ற எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் பங்களிப்பை இன்றைய தலைமுறையினருடன் பகிர்ந்துகொள்ளும்விதமாக இந்த அமர்வு அமைந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon