சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் நடந்த சிலம்பப் போட்டியில் இந்திய நட்சத்திரம்

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 160 விளையாட்டாளர்கள் உட்லண்ட்ஸ் உள்ளரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) நடந்த சிலம்பக் கோர்வை என்ற சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டனர். 

சிங்கப்பூரில் நடக்கும் முதல் சிலம்பப் போட்டி இது என்றும் முதல் முயற்சியாக இந்த போட்டி இவ்வாண்டு தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார் சிலம்பக் கோர்வை சிங்கப்பூரின் நிறுவனர் திரு குமாரராஜன் கு ராமன், 49. 

“தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்று சிலம்பம். மேற்கத்திய கலாசாரம் பிரபலமாகும் இந்த காலசூழலில் நமக்கு சொந்தமான கலாசாரத்தை இழக்கக்கூடாது. கலாசாரத்தை இழப்பது நமது அடையாளத்தை இழப்பதற்கு சமம்,” என்றார் திரு குமாரராஜன். 

ஆண்களுக்கு 21 பிரிவுகளும் பெண்களுக்கு 17 பிரிவுகளும் வகுக்கப்பட்டன. 

கம்புச் சண்டை, குழுப் போட்டி பிரிவுகளாக விளையாட்டுகள் நடந்தேறின. 

சிலம்பத்தில் உலகச் சாதனைகளைப் படைத்து பிரபலம் பெற்றவர் இந்தியாவின் திருச்சியைச் சேர்ந்த 11 வயது குமாரி மோ.பி.சுகித்தா.

மாஸ்டர் அரவிந்தன் என்பவரின் துணையில் ஓர் ஆண்டாக சிலம்பம் கற்ற அவர், தொடர்ச்சி யாக 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்த வர். சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவரும் கலந்துகொண்டார்.

சிறந்த பெண் விளையாட்டாளருக்கான சுழற்சி முறை கிண்ணத் தைத் தட்டிச் சென்ற அவர், கம்புச் சண்டையின் இறுதி ஆட்டத்தில் 7-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 

“இந்தியாவில் பங்கேற்ற போட்டிகளைவிட இந்தப் போட்டியில் அதிக போட்டித்தன்மை இருந் தது. வழக்கமாக 10, 20 புள்ளி வித்தியாசத்தில் எளிதில் சுகித்தா வென்றுவிடுவார். 

“ஆனால் இங்கு கடுமையாக விளையாடி வெறும் 3 புள்ளி வித்தியாசத்தில் வென்றார். அனைத்து விளையாட்டாளர்களும் திறன்மிக்கவர்களாக அமைந்தனர்,” என்றார் சுகித்தாவின் தந்தை திரு மோகன் ராமசந்திரன், 46. 

ஆண் குழுவில் வெற்றி பெற்றவர் திரு குணாளன் அன்பழகன். ‘ஸ்ரீ சிலம்பக் கோர்வை ஜோகூர்’ ஆக அதிகமாக 45 பதக்கங்களை வென்றது. 

ஆக அதிகமாக 33 தங்கப் பதக்கங்களை ‘சிலம்பக் கோர்வை சிலாங்கூர்’ வென்றது,  

சிலம்பக் கோர்வை சிங்கப்பூர் 6 தங்கப் பதக்கங்களையும் சேர்த்து மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றது. போட்டியில் மொத்தம் 132 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கோர்வை சிங்கப்பூர் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போட்டியில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.