‘யாக்குல்ட்’ தொழிற்சாலையில் தமிழுடன் குதூகலச் சுற்றுலா

தமிழை வகுப்பறைகளில் மட்டும்தான் கற்க முடியும் என்று நினைத்திருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களை வெளிப்புறத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தமிழைக் கற்கலாம் என்பதை உணர வைத்தது தமிழ்ச் சுற்றுலா.

இம்மாதம் 12ஆம் தேதியன்று ‘தமிழில் ஒரு சுற்றுலா’ என்ற நடவடிக்கைக்கு ‘தி திங்–கர்ஸ் லேர்னிங் சென்–டர்’ ஏற்பாடு செய்திருந்தது. தேசிய கலைக்கூடம், எம்டிஐஎஸ் இசை அரங்கு, ‘யாக்குல்ட்’ ஆரோக்கிய பானத் தொழிற்சாலை ஆகிய இடங்களுக்கு 120 மாணவர்களை அழைத்துச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார்கள்.

மாணவர்கள் 40 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவையும் உள்ளூர் பிரபலம் ஒருவர் வழிநடத்த நான்கு வழிகாட்டிகளும் இடம்பெற்றனர். செனோக்கோ ரோட்டிலுள்ள ‘யாக்குல்ட்’ ஆரோக்கிய பானம் தயாரிக்கும் ஆலைக்குச் சென்ற மாணவர்கள் அந்தப் பானத்தைப் பற்றி மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொண்டனர். இனிப்பான ‘யாக்குல்ட்’ பானத்துடன் அவர்களது கற்றல் நடவடிக்கைகள் தொடங்கின.

1930ஆம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி மினோரு ஷிரோடா கண்டுபிடித்த பாக்டீரியா கிருமி, இந்தப் பானம் தயாரிப்புக்குப் பயன்பட்டதாக மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாக்டீரியாவில் நல்ல பாக்டீரியாவும், கெட்ட பாக்டீரியாவும் இருப்பதை அறிந்து கொண்டனர். நுண்ணுயிர், நுண்ணோக்கி, புரதம், செரிமானம் போன்ற சில அறிவியல் சொற்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

பள்ளியில் அறிவியல் பாடங்களைக் கற்பதற்கு முன்பாகவே இவர்கள் இத்தகைய சொற்களைக் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாவை வழிநடத்திய திருமதி வினுதா கந்தகுமார் இந்தச் சொற்களை அறிமுகம் செய்தபோது அந்தச் சொற்களை மூன்று முறை மாணவர்களை சொல்ல வைத்தார். சிங்கப்பூரில் மட்டும் நான்கு சுவைகளில் ‘யாக்குல்ட்’ ஆரோக்கிய பானம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அத்துடன், சிங்கப்பூரில் மட்டும்தான் 100 மில்லி லிட்டர் அளவில் பானம் விற்கப்படுவதாக மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.

தொடக்கப்பள்ளி 1, 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை கற்காத நிலையில் இத்தகைய தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டது சவாலாக இருந்ததாகக் கூறினார் திருமதி வினுதா.

“இந்தச் சொற்களை மீண்டும் அவர்கள் கேட்க நேரிடும்போது இந்த அனுபவங்களை அவர்கள் நினைவுகூரும் வாய்ப்பு உள்ளது. பழகப் பழகத்தான் சொல்வளம் அதிகரிக்கும். இந்த சுற்றுலா மூலம் அவர்கள் தெரிந்துகொண்ட சொற்கள் மாணவர்களுக்கு பின்னர் பயன்படும்,” என்றார் வினுதா.

உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சில குறிப்புகளும் விளக்கப்பட்டன. 100 ட்ரில்லியன் நல்ல பாக்டீரியா உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்பட்டது. பிறகு மாணவர்கள் யாக்குல்ட் பானத்தைத் தயாரிப்பதற்கான சுடுகலன்கள், உற்பத்தி இயந்திரங்கள் ஆகியவற்றையும் பணிமனையையும் பார்வையிட்டனர்.

“புரோபையாட்டிக்ஸ் நிறைந்த தயிரைத் தமிழர்கள் சத்துணவாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகின்றனர். யாக்குல்ட்டை ஜப்பானிய ‘தயிர்’ என்றே கூறலாம். புரோபையாட்டிக்ஸ் பற்றி பொதுமக்கள் மேலும் தெரிந்துகொள்ளவேண்டும். சிறு வயதில் சரியான படிப்பினைகளைப் பெறும்போது இந்தப் பிள்ளைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்,” என்று யாக்குல்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானி யாப் சிங் நிங் கூறினார். இந்த யாக்குல்ட் பான பணிமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் மாணவர்கள் தேசியக் கலைக்கூடம். எம்டிஐஎஸ் இசை அரங்கு ஆகியவற்றுக்குச் சென்று வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“நல்ல பாக்டீரியா பற்றி நான் கற்றுக்கொண்டேன். யாக்குல்ட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்த்து தெரிந்துகொண்டேன்,” என்றார் தொடக்கநிலை ஒன்றில் பயிலும் ஷாம்.

பணிமனையில் கடைப்பிடிக்கப்பட்ட ஜப்பானிய விருந்தோம்பலும் இந்தச் சுற்றுலாவின் மற்றோர் இனிமையான அம்சமாக இருந்தது. “அங்கு இருந்தவர்கள் எங்களிடம் அன்பாகப் பேசினார்கள்,” என்றார் தொடக்கநிலை 1 மாணவி தன்ஷிகா.

தேசிய கலைக்கூடத்தில் சிங்கப்பூரின் வரலாற்றுத் தகவல்களைப் பற்றி மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பழைய சிங்கப்பூரைப் பற்றிய கதைகள், அங்குள்ள காட்சிப் பொருட்களின் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. வருங்காலத்தில் ஓவியராக விரும்பும் எட்டு வயது ராகவ், “தேசிய கலைக்கூடத்தில் நிறைய ஓவியங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன்,” என்றார். எம்டிஐஎஸ் இசை அரங்கில் இசைக்கலைஞர் கலாசரண், 39, இசைப்பதிவு அரங்கில் பின்னணி இசையமைப்பு பற்றி மாணவர்களிடம் விளக்கினார். மாணவர்கள் கொடுத்த வார்த்தைகளையும் வரிகளையும் பாடலாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார் திரு கலாசரண். இசையுடன் கலந்திருக்கும் உணர்வுகளைப் பற்றி பேசவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!