தமிழில் சமய நிகழ்ச்சிகளை வழங்கும் ‘பிஸ்மி இஸ்லாமிய வானொலி’

தமிழ் முஸ்லிம்களுக்குச் சமயம் சார்ந்த சொற்பொழிவுகள், பாடல்கள், தொழுகை நேரம், தொழுகைக்கான அழைப்பு போன்ற சேவைகளை வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது ‘பிஸ்மி இஸ்லாமிய வானொலி’.

குறிப்பாக கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் நடப்பில் உள்ளதால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மக்கள் இணையத்தையே நம்பியுள்ளனர்.

அந்த வகையில், புனித ரமலான் மாதத்தில் சமய நிகழ்ச்சிகளுக்கான தேவைகள் அதிகரித்திருந்த நிலையில், பிஸ்மி வானொலி அதிகமான நேயர்களை ஈர்த்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டு, 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்த இணைய வானொலிச் சேவை.

“வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமான நேயர்கள் எங்களது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுள்ளனர். இப்போது எங்களுக்குக் கிட்டத்தட்ட 185,000 நேயர்கள் இருக்கிறார்கள்,” என்றார் இந்த வானொலிச் சேவையை வழிநடத்தும் திரு சீனி ஜாஃபர் கனி (படம்).

சிங்கப்பூர் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள தமிழ் முஸ்லிம்களுக்காகவே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு கனி குறிப்பிட்டார். ‘ஆப்பிள் ஆப்ஸ்டோர்’ அல்லது ‘ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர்’ வழியாக ‘பிஸ்மி இஸ்லாமிக் ரேடியோ’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரமும் இயங்கும் இந்த வானொலி சேவையைக் கேட்கலாம்.