தொண்டாற்றத் திரும்பினார்

கி.ஜனார்த்தனன்

தாதிமைத் தொழிலை விட்டுவிட்டு நண்பர்களுடன் சொந்தத் தொழில் தொடங்கிய ப்ரிவீன் சூரஜ் சாந்தகுமார், 32, கொவிட்-19 கிருமிப் பரவலை அடுத்து மீண்டும் தாதிமைப் பணிக்குத் திரும்பியிருக்கிறார். எக்ஸ்போ அரங்கின் சமூகப் பராமரிப்பு வசதியில் தங்கவைக்கப்பட்டு உள்ள கிருமித்தொற்று நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்களில் இவரும் ஒருவர்.

தொடக்கத்தில் சட்டத் துறையில் பயின்று வந்த திரு ப்ரிவீன், தாதிமைப் பணி மீது ஆர்வம் ஏற்பட, பின்னர் அதையே படிக்க முடிவு செய்தார். படிப்பை முடித்தபின் இவர் 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் முக்கிய அறுவை சிகிச்சைக் கூடத்தில் தாதியாகச் சேர்ந்தார்.

“நெருக்கடி மிகுந்த சூழலைச் சமாளிக்க அங்கு கற்றுக்கொண்டேன்,” என்றார் திரு ப்ரிவீன்.

ஆனாலும், சுயதொழில் புரிய விரும்பிய திரு ப்ரிவீன், தம்மைப் போலவே ஆண் தாதியராக முன்னர் பணியாற்றிய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு துப்புரவு நிறுவனத்தைத் தொடங்கினார். தொழில் தொடங்கி ஓராண்டுகாலம் ஆன நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தால் ஆட்டங்கண்ட நிறுவனங்களில் இவரது நிறுவனமும் ஒன்று.

“எனது வர்த்தகத்திற்காக வெளிநாட்டு ஊழியர்களுடன் நாள்தோறும் பேசிப் பழகுவேன். சிங்கப்பூரர்கள் செய்யத் தயங்கும் வேலைகளை அவர்கள் கடமையுணர்வுடன் செய்கின்றனர். எனவே, மீண்டும் தாதியாகப் பணியாற்றுமாறு என்னை அணுகியபோது அதற்கு ஒப்புக்கொண்டேன்,” என்று திரு ப்ரிவீன் விவரித்தார்.

வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால் தமக்கு இந்த முடிவை எடுப்பது எளிதாக இருக்கவில்லை என இவர் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் என் பெற்றோர் எனக்காகவும் கவலைப்பட்டனர். இருந்தபோதும் தாதியாக எனது கடமை உணர்வைப் புரிந்துகொண்டு அவர்கள் முழுமனதுடன் என்னை ஆதரித்தனர்,” என்றார் இவர்.

ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியன்று எக்ஸ்போ சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தில் மீண்டும் தாதிமைப் பணியைத் தொடங்கினார் திரு ப்ரிவீன். அங்கு, பாதுகாப்பு அங்கிகள் தொடர்பாக இவருக்கு மறுபயிற்சி அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அங்கிகளை மருத்துவமனையில் அணிவதற்கும் சமூக பராமரிப்பு வசிப்பிடத்தில் அணிவதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக இவர் சொல்கிறார்.

“மருத்துவமனையைப் போல அன்றி, பராமரிப்பு வசிப்பிடத்தில் வெப்பநிலை அதிகமாக, அதாவது 28 டிகிரி செல்சியல் வரை உள்ளது. எனவே பாதுகாப்பு அங்கிகளுடன் அங்கு வேலை செய்யும்போது உடற்சூடு அதிகரிக்கிறது. அந்தச் சூட்டுடன் வேலை செய்வது கடினம்தான் என்றாலும் நோயாளிகளின் வசதிக்குத்தான் நாம் முதன்மை கொடுப்போம்,” என்றார் இவர்.

கொரோனா கிருமிப் பரவலால் பராமரிப்பு விதிமுறைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், சலிப்படையாமல் தாதிமைப் பணியைத் தான் விரும்பியே செய்வதாகக் கூறுகிறார் திரு ப்ரிவீன்.

“என்னைப் போல தமிழ் தெரிந்த தாதியரும் மருத்துவ ஊழியர்களும் பராமரிப்பு வசிப்பிடத்தில் தங்கியுள்ள தமிழர்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வர். தமிழில் உரையாடும்போது அந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்,” என்று இவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் முன்பு பணியாற்றிய அனுபவத்தாலும் சிங்கப்பூரின் உன்னதமான பாதுகாப்பு முறைமையாலும் தமக்கு எந்தப் பயமும் இல்லை என்று திரு ப்ரிவீன் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

“தாதியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் பணியாற்றும் ‘உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ்’ அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்று இவர் சொன்னார்.

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நாளையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், மக்கள் மெத்தனமாக இராமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே இவரது அக்கறையும் வேண்டுகோளும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!