‘நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை’

இந்திய மருத்துவர் ஒருவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படும் அதேசமயத்தில் மனதில் பதற்றமும் ஏற்படும்.

கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டால் அடுத்தது என்ன நடக்கும் என்ற மனக்குழப்பம்.

தம்மிடம் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதுபோன்ற பல கேள்விகள் எழுவதாக டாக்டர் பா.செல்வமணி கூறினார்.

சுவா சூ காங் பலதுறை மருந்தகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வரும் இவர், நாள்பட்ட நோய் பராமரிப்பு, அவசர சிகிச்சை, பெண்கள் மற்றும் குழந்தை நலம் போன்ற பல்வேறு பிரிவுகளில் நாள் ஒன்றுக்கு 40 நோயாளிகள் வரை பார்க்கிறார்.

இங்குள்ள பலதுறை மருந்தகங்களில் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் தொடங்கியதிலிருந்து அப்பணியிலும் டாக்டர் செல்வமணி ஈடுபட்டு வருகிறார்.

அதையும் தாண்டி வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் சிறிய அளவிலான விடுதிகளுக்குச் சென்று கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்துவதுடன் மருத்துவ ஆலோசனையும் வழங்குகிறார்.

தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருந்தகத்தில் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலத்தையும் இவர் கண்காணிக்கிறார்.

மற்ற பலதுறை மருந்தகங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், தாதியர்கள், நிர்வாக உதவியாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து டாக்டர் செல்வமணி செயல்படுகிறார்.

வாரத்தில் சுமார் மூன்று முறை தங்கும் விடுதிகளில் இவர் பணியாற்றுகிறார். அதன் பிறகு பலதுறை மருந்தகத்தில் இவர் பணிக்குத் திரும்பும்போது பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே இவர் பணியாற்ற முடியும்.

இந்திய, பங்ளாதே‌ஷ் ஊழியர்களிடம் அவர்களது சொந்த மொழிகளில் பேசும்போது உடல்நலப் பிரச்சினைகளை அவர்கள் தெளிவாக விளக்குவதாகக் கூறிய டாக்டர் செல்வமணி, அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசும்போது வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தைரியம் ஏற்படுவதாகச் சொன்னார்.

உள்ளூர் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியான டாக்டர் சுதேஸ்னா ராய் செளதரி, சுகாதாரத் துறை ஊழியர்களுக்காக அண்மையில் மருத்துவம் தொடர்பான மொழிபெயர்ப்புச் சேவை வழங்கும் இணையத்தளத்தளம் ஒன்றை உருவாக்கியிருந்தார். அதில் வங்காள சொற்கள் சிலவற்றை டாக்டர் செல்வமணி கற்றுக்கொண்டார்.

“வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்குப் புகைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. இதுபோன்று தங்களது சொந்த பிரச்சினைகளை அவர்கள் வெளிப்படையாக பகிர்வது எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். ஏனெனில், பெரும்பாலான வேளைகளில் அவர்களோடு உரையாடும் வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று தெரிவித்தார் டாக்டர் செல்வமணி, 36.

வெளிநாட்டு ஊழியர்களின் உணர்வுகள், வாழ்க்கைமுறை போன்றவற்றை இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள இந்த அனுபவம் இவருக்கு வாய்ப்பளிக்கிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று பற்றி ஆரம்பத்தில் அதிக விவரங்கள் தெரியாமல் இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பதற்றமடைந்ததாகச் சொன்ன டாக்டர் செல்வமணி, தற்போது அந்த விவரங்களை அவர்களது சொந்த மொழிகளில் விளக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நிதானமாக இருப்பதாகக் கூறினார். நோய்க்கான அறிகுறிகளைக் கொண்ட பல ஊழியர்களை இவர் பரிசோதிக்கிறார். இதனைக் கருதி, சுகாதார அமைச்சின் ஊழியர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை டாக்டர் செல்வமணி உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் பின்பற்றி வருகின்றனர்.

“நாள் ஒன்றுக்குப் பலமுறை நாங்கள் குளிப்போம். வீட்டில் பெரும்பாலும் என் சொந்த அறையில்தான் நான் இருப்பேன். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது முகக்கவசம் அணிந்துகொள்வேன். எனது சக ஊழியர்களும் வீட்டிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருகின்றனர்,” என்கிறார் டாக்டர் செல்வமணி.

இந்த கொவிட்-19 நிலவரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நிலைமை சீராகும் வரை மனதளவில் தாம் தயாராக உள்ளதாக இவர் சொல்கிறார்.

“எங்கள் கடமையைச் செய்யும்போது, மற்ற எந்த சிந்தனையும் வருவதில்லை. எங்களுக்குமுன் இருக்கும் நோயாளியின் நலனுக்குத்தான் முன்னுரிமை அளிப்போம். அதுதான் இந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள உத்வேகம் தருகிறது,” என்றார் டாக்டர் செல்வமணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!