கடையநல்லூர் அடையாளம் காக்க முயற்சி

வி.கே.சந்தோஷ்குமார்

 

கடையநல்லூர் முஸ்லிம் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் திருமதி ஸைனபா பீவிக்கு அலாதி பிரியம்.

“அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதுதான் மற்றவர்களின் குடும்பப் பெயர்களை நான் கேட்டறிவேன். லப்பை, தரகர், நக்கீரன், ராவுத்தர் என பெயர் பட்டியல் நீண்டு செல்லும். உடனே அவற்றுக்கு இடையிலான தொடர்பை நான் இணைப்பேன்.

“நாங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள் என என்னால் கூறமுடியும். எங்களது குடும்பங்களைப் பற்றி பேசுவோம்,” என்றார் தளவாடவியல் நிபுணரான திருமதி ஸைனபா, 27.

1900களின் தொடக்கத்தில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம், கடையநல்லூரிலிருந்து முதல் குடியேறி சிங்கப்பூருக்கு வந்தார் என நம்பப்படுகிறது. கடையநல்லூரைச் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 பேர் தற்போது இங்கு வசிக்கின்றனர்.

கடையநல்லூர் சமூகத்தைச் சேர்ந்த இளையர்களில் பெரும்பாலானோர், தங்கள் மூதாதையர்கள் பிறந்த இடத்திற்குச் சென்றதே இல்லை. என்றாலும், கடையநல்லூர் மொழி வழக்கு, பாரம்பரியத்தை அவர்கள் இன்னமும் பின்பற்றுகின்றனர்.

நெசவுத் தொழில், தென்னந் தோப்பு, நெல் சாகுபடி போன்றவற்றுக்கு பெயர்போனது கடையநல்லூர்.

“நாங்கள் பேசும் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. பிராமணர்கள் வசித்த பகுதிகளுக்கு அருகே கடையநல்லூர் இருந்ததால் (19வது மற்றும் 20வது நூற்றாண்டின் தொடக்கத்தில்) அவர்களது மொழி வழக்கை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.

“வாங்கோ, உட்காருங்கோ, நில்லுங்கோ, போங்கோ, இருங்கோ, என பிறரை மரியாதையுடன் அழைப்போம்.

“இந்தப் பேச்சு வழக்கு இளம் தலைமுறையினர் உட்பட எங்களது சமூகத்தினரிடம் இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இதை நான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை,” என்கிறார் திருமதி ஸைனபா.

பெண்கள் அணியும் ஆடையிலும் தனித்தன்மை உள்ளது. கைலி (லுங்கி), ரவிக்கை, முக்காடு, ஷால் ஆகியவற்றை அவர்கள் அணிவர்.

கடையநல்லூர் சமூகத்தினர் சமைக்கும் உணவிலும் சிறப்புண்டு.

“பெருநாளன்று இடியாப்பம், கோழிக் குழம்பு சமைப்போம். பீஹூன் பிரியாணியும் தால்ச்சாவும் உண்டு,” என்றார் ஸைனபாவின் கணவர் அமீர் ரோஷன், 28.

திருமணம், பெருநாள் போன்ற விழாக்களில் சமூகத்தினர் ஒன்றிணைவதுண்டு.

“சமூகப் பிணைப்பு இன்னமும் உயிரோட்டத்துடன் உள்ளது. பெரும்பாலும் நாங்கள் ஒரே தட்டில்தான் உணவருந்துவோம்.

“எனினும், எனது தாத்தா காலத்தில் இருந்ததுபோல இப்போது இல்லை,” என்றார் ஸைனபா.

கடையநல்லூர் முஸ்லிம்கள் சிலர் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்து சமயத்தினரை திருமணம் செய்து, பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டதாக அவர் கருதுகிறார்.

“கடையநல்லூர் அடையாளத்தைக் காக்க பொதுவாக இளையர்கள் விரும்புகின்றனர். எனினும், எல்லாரும் அப்படி நினைப்பதில்லை. சமூகம் நீர்த்துப் போகிறதோ என்று தோன்றுகிறது. எதிர்காலத் தலைமுறையினர் என்ன செய்யப் போகின்றனர் என்பது என்னால் சொல்ல முடியவில்லை,” என்றார் ஸைனபா.

இளையர்களின் மனப்போக்கு மாறி வருகிறது என்ற அவரது கருத்தை அசினா கதிஜாவும் எதிரொலிக்கிறார்.

“மூத்தோரை நாங்கள் மதிக்கிறோம். குறிப்பிட்ட சம்பிரதாயங்களை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், சமூகத்தில் உள்ள அனைவருடனும் நாங்கள் எங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளவில்லை. எங்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் செய்கிறோம்.

“ஆடை அணியும் விதமும் இப்போது மாறிவிட்டது. பெண்கள் பெரும்பாலும் சேலை அணிவதற்குப் பதிலாக மலாய்க்காரர்களின் பாணியில் உடை உடுத்துகின்றனர். எது எங்களுக்கு சௌகரியமாகவும் நவநாகரிகமாகவும் உள்ளதோ அவற்றை இணைத்து நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார் பாலர் பள்ளி ஆசிரியரான அசினா, 21.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவரான திரு நசீர் கனி, இளம் தலைமுறையினர் பாரம்பரியத்தைப் பின்பற்ற வைப்பது முன்பைவிட இப்போது கடினமாக இருப்பதாகச் சொல்கிறார்.

“மேம்பட்ட கல்வித்தகுதி பெற்றிருக்கும் இளையர்கள், அவர்களுக்கு விருப்பமானவற்றை நாடுகின்றனர். கடையநல்லூர் அடையாளம் காணாமல்போய்விடுமோ என்ற கவலை எங்களுக்கு உண்டு. எங்களது வழிமுறையை இளையர்களுக்குச் சொல்லித்தர முயற்சி எடுத்து வருகிறோம்.

“காலம் மாறிவிட்டது. இளையர்கள் நிதிநிலைத் தற்சார்பை எட்டி உள்ளனர். அவர்களைக் கட்டிப்போட முடியாது,” என்றார் ஆசிரியரான திரு கனி, 61.

ஆனால், திரு கனியின் தாத்தா அப்துல் காதருக்கு இந்த நிலை அப்போது ஏற்படவில்லை. 1911ஆம் ஆண்டில் கடையநல்லூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஏவலராக (பியூன்) பணிபுரிந்தார். சமூக ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது.

திரு நசீர் கனியின் தந்தையான திரு முஹைதீன் கனி, 1935ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். ஷெல் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக அவர் பணியாற்றினார்.

1900களின் தொடக்கத்தில் கடையநல்லூரிலிருந்து புறப்பட்டு மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி மலாய் தீபகற்பத்திற்குச் சென்ற முதலிரு தலைமுறையினர், சமூகத்தில் பிறரின் உதவியைப் பெரிதும் சார்ந்து இருந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கைலி தைக்கும் நெசவாளர்களாகவும் துணிப்பொருட்களை வேறு நகரங்களில் விற்கும் இடைத்தரகர்களாகவும் பணியாற்றினர்.

அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார், குடிசைத் தொழில்களின் செயல்பாட்டால் தங்களது இயந்திரம் சார்ந்த வர்த்தகங்களில் லாபம் குறைந்ததைக் கண்டறிந்தனர். அதையடுத்து, குடிசைத் தொழில்களின் மீது கூடுதலான வரியை அவர்கள் விதித்தனர்.

கப்பல் பயணம் மூலம் பினாங்கு அல்லது சிங்கப்பூருக்கு வந்த குடியேறிகள், கூலித் தொழிலாளிகளாகவும் ஏவலர்களாகவும் வேலை செய்தனர். 1920களில் தஞ்சோங் பகார் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் குடியேறின.

படிப்படியாக, ஆண்களின் வருமானத்திற்குப் பெண்களும் பங்காற்றத் தொடங்கினர். குழம்பு சமைத்து, தாளிப்பு மற்றும் நறுமணப் பொருட்களை விற்று குடும்ப வருமானத்திற்கு அவர்கள் பங்களித்தனர்.

அப்போது ஐசிஐ எனும் ரசாயன நிறுவனம் ஒன்றில் அலுவலராக உயர் பதவி வகித்த திரு அ.நா.மெய்தீன், இங்கு குடியேறியவர்கள் கல்வியறிவு பெறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

1920களில் திராஸ் ஸ்திரீட்டில் முஸ்லிம் மேம்பாட்டு மன்றத்தை அவர் தோற்றுவித்தார். அதன் பிறகு 1941ல் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கை அவர் நிறுவினார். மேக்ஸ்வேல் சாலையில் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியைக் கட்டுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

“கல்வியறிவு பெற்றால் மேம்பட்ட வேலைகள் உருவாகும் என்பதை திரு மெய்தீன் உணர்ந்தார்.

“1960களுக்குள் கடையநல்லூரைச் சேர்ந்த பலரும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் போன்ற பணிகளைச் செய்யத் தொடங்கினர்,” என்றார் திரு நசீர் கனி.

இன்று அச்சமூகத்தைச் சேர்ந்த மேலும் பலர் மருத்துவர்கள், கணக்காய்வாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பல்வேறு தொழில்துறைகளில் கால்பதித்து வருகின்றனர்.

“கடையநல்லூர், சென்னை, பினாங்கு, மலாக்கா, கோலாலம்பூர் போன்ற நகரங்களில் எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் இன்னமும் தொடர்பில் உள்ளேன்.

“ஆனால் எனது மகன் அவர்களுடன் அந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கவில்லை. இளம் தலைமுறையினர் தங்களை சிங்கப்பூரர்களாக அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்,” என்றார் திரு கனி.