‘உன்­னைப் போல் பிற­ரை­யும் நேசி’

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

வேலை செய்­தால் அது சேவைத் துறை­யா­கத்­தான் இருக்க வேண்­டும் என்று தீர்­மா­னித்­த­வர் எஸ்எம்­ஆர்டி நிறு­வ­னத்­தில் பயணிகள் சேவை அதி­கா­ரி­யாக 19 ஆண்­டு ­க­ளுக்கு முன் வேலை­யில் சேர்ந்த திரு­மதி வீ. கெளரி.

மக்­க­ளு­டன் இயல்­பாகப் பேசி உரை­யா­டு­வது அவருக்குப் பிடித்த மான ஒன்று. அதற்கு மேலாக, பிற­ருக்கு உத­வும் மன­மும் படைத்­த­வர் இந்த 41 வயது நிலையத் துணை நிர்­வாகி.

ஒரு­முறை டோபி காட் எம்ஆர்டி நிலை­யத்­தில் ஒரு சிறு­வன் நீண்ட நேர­மாக யாரு­டைய துணை­யு­மின்றி நட­மா­டு­வதை கவ­னித்து அவனை கெள­ரி­யி­டம் அழைத்­துச் சென்­றார் ஒரு நடுத்­தர வயது ஆட­வர்.

ஆட­வ­ரின் கைபேசி விவ­ரங்­களை வாங்கிக்­கொண்டு சிறு­வனை பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைத்­த­தும் அவரிடம் தெரி­விப்­ப­தாக திருமதி கெளரி கூறி­னார்.

அடுத்து வந்தது சிக்கல். திருமதி கெளரி கேட்­ட கேள்­வி ­க­ளுக்கு அச்­சி­று­வன் எந்த பதி­லும் அளிக்­காது அங்­கும் இங்­கும் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தான்.

“காணா­மல் போன சிறு­வர்­கள் அழத் தொடங்­கு­வர் அல்­லது தங்­க­ளது பெற்­றோ­ரின் தொடர்பு எண்ணைப் பிற­ரி­டம் பகிர்ந்­து­கொள்­வர். ஆனால் இச்­சி­று­வன் மெள­னம் சாதித்­தான்.

“அவனது நம்­பிக்­கையை பெறு­வ­தற்குச் சற்று வித்­தி­யா­ச­மாக யோசித்­தேன்,” என்று கடந்­தாண்டு வார­இ­றுதி நாள் ஒன்­றில் டோபி காட் எம்ஆர்டி நிலை­யத்­தில் நடந்த சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார் திரு­மதி கெளரி.

திரு­மதி கெள­ரிக்கு 11 வயது மகள் இருக்­கி­றார். தமது மக­ளுக்கு பிடிக்­கும் கேலிசித்­திரத் தொடர்­கள் அவருக்கும் பிடிக்­குமா என்று சிறு­வ­னி­டம் கைபேசியில் காண்­பிக்கத் தொடங்­கி­னார்.

சிறு­வன் மெல்ல மெல்ல உற்­சா­கம் அடைந்து பதி­ல­ளிக்க தொடங்­கி­னான். வண்­ணம் தீட்­டும் போட்டி இருக்­கிறது, அதில் கலந்து­கொள்­கி­றாயா என்று சிறு­வனை ஆர்­வப்­ப­டுத்தி அவனை அந்­ந­ட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுத்­தி­னார்.

கெளரி மீது சிறு­வ­னுக்கு நம்­பிக்கை வரவே, தனக்கு கவ­னிப்பு பற்­றாக்­குறை அதி­யி­யக்கச் சீர்­குலைவு (ADHD) குறைபாடு இருப்­பதைப் பகிர்ந்­து­கொண்­ட­தோடு தாயா­ரின் தொடர்பு எண்ணை­யும் அவ­ரி­டம் சொன்­னான்.

விவ­ரம் தெரிந்து பத­றிப்­போன சிறு­வ­னின் பெற்­றோர் உட­ன­டி­யாக ரயில் நிலை­யத்­திற்கு விரைந்து வந்­த­னர்.

பல்மருத்துவரான தாயார் வீட்­டில் அன்று ­சி­று­வனைப் பார்த்துக் ­கொள்ள யாரும் இல்­லா­த­தால் அவனை வேலை­யி­டத்­திற்கு அழைத்து வந்­தி­ருக்­கி­றார்.

தாயார் பணி­யில் ஈடு­பட்ட நேரத்தில் யாருக்­கும் தெரி­யா­மல் சிறு­வன் உலா­வச் சென்­ற­தில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

“என் மகள் காணா­மல் போனால் எனது மனம் எவ்வாறு பதைக்குமோ, அதே பதைபதைப்பை அத்­தா­யா­ரி­டம் கண்­டேன். இரு­வ­ரை­யும் சேர்த்து வைக்க முடிந்­த­தில் மகிழ்ச்சி அடைந்­தேன்,” என்று தெரி­வித்­தார் திரு­மதி கெளரி.

இது­போன்ற பல்­வேறு வகை­களில் பய­ணி­க­ளுக்கு உதவிவரும் திரு­மதி கெள­ரிக்கு சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழகப் போக்­கு வரத்துப் பிரி­வின் உன்­னத வாடிக்­கை­யா­ளர் சேவை விருது இம்­மா­தம் வழங்­கப்­பட்­டது.

“பணி­யில் மட்­டும் இல்­லா­மல் எல்­லா­ருக்­கும் உத­வும் மனப்­பான்­மையைக் கொண்­டி­ருக்­கும் சமு­தா­ய­மாக நாம் உரு­வெ­டுக்க வேண்­டும் என்­பது என் ஆசை.

இவ்­வி­ருது எங்கள் நிறு­வன ஊழி­யர்­க­ளை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தும் என்று நம்­பு­கி­றேன்,” என்று தெரி­வித்­தார் திரு­மதி கெளரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!