மோடிக்கு நெருக்கடி

கொவிட்-19 தொற்று இரண்டாவது அலையால் இந்தியா மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து, தேசிய அளவில் முடக்கநிலையை அறிவிக்கும்படி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதால் அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பல நாள்களாக இந்தியாவில் அன்றாடம் 300,000க்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்றி வருகிறது; நாள்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வருகின்றன. 

அவ்வகையில் இன்று புதிதாக 357,229 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர்; 3,449 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 20,282,833 ஆகவும் உயிரிழப்பு 222,408 ஆகவும் அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்காலிக முடக்கநிலையும் தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்று அமெரிக்காவின் முன்னணி நோய்த்தொற்றியல் நிபுணர் ஆன்டனி ஃபௌசி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் பணக்கார வங்கியாளருமான திரு உதய் கோட்டக், கொரோனா நோயாளிகள் பராமரிப்பிற்கு உதவ ராணுவத்தைக் களமிறக்க வேண்டும் என்றும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பொருளியல் நடவடிக்கைகள் குறைப்பு உட்பட நாடு தழுவிய அளவில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

“கிருமிப் பரவலைத் தடுக்க தேசிய அளவிலான ஊரடங்கு  ஒன்றே தீர்வு. அதே வேளையில், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்குக் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டத்தை அறிவிக்க வேண்டும்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி.

வேறு வழி ஏதும் இல்லையேல் கடைசி ஆயுதமாகத்தான் முடக்கநிலையை அறிவிக்க வேண்டும் என இரு வாரங்களுக்குமுன் மாநில அரசுகளை திரு மோடி கேட்டுக்கொண்டிருந்தது நினைவு கூரத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!