ராமதாஸ், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பால் புதிய பரபரப்பு

சென்னை: தமிழக காங்கி ரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார் திருநாவுக்கரசர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பாமக நிறுவனர் ராமதாசையும் அவர் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு, திருநாவுக்கரசர் புதிய கூட்டணிக்காக காய்களை நகர்த்துகிறாரோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

ராமதாசுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், பாமக நிறுவனர் தமது நீண்டகால நண்பர் என்றார். “தமிழக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம். இதில் அரசியல் ஏதுமில்லை,” என்றார் திருநாவுக்கரசர். அண்மைய சில தினங்களாக திமுக தலைமைக்கு எதிரான கருத்துகளை மறைமுகமாகத் தெரிவித்து வரும் அவர், திமுகவை கடுமையாக விமர்சிக்கும் மருத்துவர் ராமதாசை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவ மனைக்கு இருமுறை நேரில் சென்று விசாரித்துள்ளார் திருநாவுக்கரசர் என்பதும் குறிப்பிடத்தக்கது.