காவிரி விவகாரம்: மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்தது என்கிறார் முத்தரசன்

சேலம்: காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது பச்சை துரோகம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் இதைக் கூற உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததை ஏற்க இயலாது என்றார். “திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது நல்ல தீர்மானம். கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி விவசாயிகள் கூட்டத்தில் அனைத்து கட்சியின ரும் கலந்து கொண்டனர். அதிமுக மட்டும் கலந்து கொள்ள வில்லை.

“திமுக, காங்கிரஸ், தமாகா, மக்கள் நலக் கூட்டணியினர் என அனைவரும் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படிதான் கடந்த 17, 18ஆம் தேதிகளில் ரயில் மறியல் போராட் டம் நடந்தது,” என்றார் முத்தரசன். காவிரி விவகாரம் தொடர்பில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், காவிரி நதி நீரை தமிழக மக்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் எனில் கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமை சிதறி விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். “மக்கள் நல கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல். நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள் ளோம். சிலர் பிளவு ஏற்படுத்தி பார்க்கிறார்கள். அது நடக்காது,” என்று முத்தரசன் தெரிவித்தார்.