சுடச் சுடச் செய்திகள்

மக்கள் வாழ்வைக் கெடுத்து வருமானம் ஈட்டக்கூடாது: நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மது விற்பனை தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது. மதுக்கடை ஒன்றை அகற்றக் கோரி தொடுக்கப்பட்டுள்ள மனு ஒன்றை விசாரித்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வாறு கூறினார். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுப்புட்டிகள் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது என்று அவர் தெரிவித்தார். மாறாக, மாநில அரசானது மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வாழ்வைக் கெடுத்து அரசாங்கம் வருமானம் ஈட்டக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.