அருண்ஜெட்லி: எல்லையில் எப்போதும் எதுவும் நடக்கலாம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் விமானங்கள் அடுத்தடுத்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படை தளபதி தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், பின்லேடனைப் பிடிப்பதற்காக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததைப்போன்று நுழைய  தயார் என்றும் ஜெட்லி கூறினார்.
இந்நிலையில், இந்திய விமானப் படை எல்லையில் வெடி குண்டுகள் வீசி தாக்குவதற்கு முன் உளவுத் துறையால் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
பயங்கரவாதி மவுலானா அமர் மற்றும் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சைஃப் ஆகியோரின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.