சுடச் சுடச் செய்திகள்

பங்ளாதேஷ்: ஆசிரியர் உத்தரவின்பேரில் மாணவி எரித்துக் கொலை

பள்ளி மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதால் பங்ளாதே‌ஷில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
அங்குள்ள சமயப் பள்ளியில் பயின்று வந்த நஸ்ரத் ஜஹான் ரஃபி என்ற 19 வயது மாணவிக்கு அப்பள்ளியின் முதல்வர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது நஸ்ரத் கடந்த மாதம் உள்ளூர் போலிசில் புகாரளித்தார்.
நஸ்ரத்தின் மனுவை போலிஸ் அதிகாரி ஏற்றுக்கொண்டபோதும் அவரது புகார் ஒரு பெரிய விஷயம் அல்ல என்று கூறும் காணொளி கசிந்தது.
இந்நிலையில், தன்மீது அளித்த புகாரைத் திரும்பப் பெறும்படி நஸ்ரத்தை பள்ளி முதல்வர் வற் புறுத்தி வந்துள்ளார்.
சம்பவ நாளன்று, அவரது உத் தரவின் பேரில் நஸ்ரத்தை சிலர் பள்ளியின் கூரைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, ‘புகாரைத் திரும்பப் பெற ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள், இல்லையேல் கொன்றுவிடுங்கள்’ என்று அவர்களிடம் முதல்வர் அறிவுறுத்தியதாக நஸ்ரத்தின் மர ணம் குறித்து விசாரித்து வரும் போலிஸ் கண்காணிப்பாளர் முகம்மது இக்பால் தெரிவித்தார்.
புகாரைத் திரும்பப் பெற நஸ்ரத் மறுக்கவே, தாக்குதல்காரர்கள் அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்தனர். 80% தீக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நஸ்ரத், இம்மாதம் 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீ வைப்பதற்கு முன்பாக நஸ்ரத்தின் வகுப்புத் தோழர்கள் மூவர் உட்பட ஐந்து பேர், அவரது கை கால்களைக் கட்டிவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.
“நஸ்ரத்தின் மரணத்தைத் தற் கொலை என மூடி மறைக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கை கால்களில் கட்டியிருந்த துணி தீயில் எரிந்துவிட்டதால் நஸ்ரத் எப்படியோ படிகளில் இறங்கி  அங்கிருந்து தப்பினார்,” என்றார் திரு இக்பால்.
இறப்பதற்கு முன்பாக கைபேசி யில் ஒரு காணொளியைப் பதிவு செய்த நஸ்ரத், பள்ளி முதல்வர் மீது மீண்டும் குற்றம் சுமத்தினார்.
“அந்த ஆசிரியர் என்னைத் தொட்டார். இறுதி மூச்சுள்ள வரை  இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவேன்,” என்று காணொளி யில் கூறியிருந்த அவர், தம்மைத் தாக்கி கொளுத்தியவர்களில் ஒரு சிலரையும் அடையாளம் காட்டி னார். அவரது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நஸ்ரத்தின் மரணம் பங்ளா தே‌ஷில் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்த, குற்றவாளிகளில் எவரும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று அதிபர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார்.
குற்றவாளிகளை அதிகாரிகள் தண்டிக்கத் தவறுவதால் நாட்டில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. நஸ்ரத் விவகாரம் அதற்கு ஒரு சான்று என்றார் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் தெற்கு ஆசிய இயக்குநர் திருவாட்டி மீனாட்சி கங்குலி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon