சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு: ஒரு நகரமே வறண்டுபோனது

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னை தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. கூவம், அடையாறு, கொற்றலை ஆறுகள் நகரின் மையப் பகுதியிலும், தென், வட விளிம்புகளிலும் ஓடுகின்றன.  இவை தவிர, மற்ற பல ஏரிகளும் நீர்நிலைகளும் உள்ளன. சென்னையில் 6 கிலோமீட்டர் நீளமான மரினா கடற்கரையும் உள்ளது. 

இருப்பினும், சென்னை இன்று கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. மோசமான தண்ணீர் நிர்வாகமும், நீர்நிலைகள் தூய்மைக்கேட்டுக்கும் அபகரிப்புக்கும் இலக்காகாமல் தடுக்கத் தவறியதும் இதற்கான முக்கிய காரணங்கள். 

 “மெட்ரோ வாட்டர்” எனும் சென்னை குடிநீர் வாரியம் அன்றாடம் விநியோகிக்கும் குடிநீரின் அளவு ஜூன் 1 முதல் நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டரில் இருந்து 525 மில்லியன் லிட்டருக்குக் குறைந்திருக்கிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சி இதற்குக் காரணம். 

சென்னைவாசிகள் பலவண்ண பிளாஸ்டிக் குடங்களுடன் நகரெங்கிலும் வரிசைப்பிடித்து நின்று, குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகள் விநியோகிக்கும் தண்ணீருக்காகக் காத்திருக்கின்றனர். வசதியுள்ளவர்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து தண்ணீர் வாங்குகின்றனர். மொத்தம் 12,000 லிட்டர் தண்ணீருக்கு 3,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. பற்பல தனியார் பள்ளிகள் இளநிலை வகுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன அல்லது அரை நாளுக்கு மட்டுமே வகுப்புகளை நடத்துகின்றன. நிறுவனங்களும் தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கைகளை அமலாக்கியுள்ளன. உதாரணமாக, தண்ணீர்க் குழாய்களில் நீரோட்டத்தின் அழுத்தம் குறைக்கப்படுகிறது. 

ஹோட்டல்களும் உணவகங்களும் உணவுப் பரிமாறல்களைக் குறைத்துள்ளன. தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் சாம்பார் போன்ற உணவு வகைகளைச் சில உணவகங்கள் இப்போது சமைப்பதில்லை. 

“அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே தரமுடியும் என்றும், கை கழுவும் தொட்டிகளில் நீரோட்டத்தின் அழுத்தம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் சொல்கிறோம். தண்ணீரைச் சிக்கனப்படுத்த உதவும்படியும் அவர்களிடம் சொல்கிறோம்,” என்றார் நுங்கம்பாக்கம் வட்டாரத்திலுள்ள ஹோட்டல் ராஜ் பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு சி.ஆர்.பி.பாட். 

சற்றே பெய்த மழை தற்காலிக நிவாரணம் அளித்த போதிலும், தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை. சென்ற ஆண்டு தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டுடன் சென்னையின் நிலைமை ஒப்பிடப்படுகிறது. 

“தண்ணீருக்கான ஒரே மூலம் மழை என்பதையும் இதனை சர்வ சாதாரணமாகக் கருதக்கூடாது என்பதையும் மக்கள் உணரவேண்டும். இந்தத் தட்டுப்பாடு நம்மைத் தட்டியெழுப்பும் ஒரு படிப்பினை,” என்றார் மழை நிலையத்தின் இயக்குநரான டாக்டர் சேகர் ராகவன். சென்னையிலுள்ள இந்த லாப நோக்கற்ற அமைப்பு, தண்ணீர் அறுவடையை ஆதரிக்கிறது. 

இந்தியாவின் செழிப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை, பெருமளவு வளர்ச்சி அடைந்த வந்தபோதிலும், நீர் வளம் பற்பல காரணங்களால் நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. 

கடந்த முப்பது ஆண்டுகளில் இருமடங்காகி 4.6 மில்லியனுக்கு அதிகரித்திருக்கும் மக்கள் தொகை, ஏரிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்பு, புறநகர்ப் பகுதிகளின் வேளாண்மைக்குத் தேவைப்படும் தண்ணீர், தொழிலியல், வணிக, குடியிருப்புத் துறைகளில் தண்ணீருக்கான தேவை பெருமளவு அதிகரிப்பு ஆகியன இக்காரணங்களில் உள்ளடங்கும். 

அகமதபாத், பெங்களூர் அல்லது டெல்லி போன்ற நகரங்களைவிட சென்னையில் சராசரியாக அதிக மழை பெய்தாலும், சென்ற ஆண்டின் பருவமழையும் அதற்கு முன்பான மழையும் நீர் மூலங்களை நிரப்புவதற்குப் போதுமானதாக இல்லை. 

இதுபோன்ற தண்ணீர் தட்டுப்பாட்டை இதற்குமுன் 1980களில் பார்த்ததாகச் சொல்கிறார் அண்ணா நகரில் வசிக்கும் திரு கே.பி.ராமசாமி. அப்போது ரயில்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். இம்முறையும் 220 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜொலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்போவதாக தமிழ்நாடு அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. 

சென்னையில் இரண்டு உப்பகற்றும் குடிநீர் ஆலைகள், நான்கு நீர்த்தேக்கங்கள், சிறிய, பெரிய ஆறுகள் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது. 

 

Read more from this section

உன்னாவ் பாலியல் சம்பவம் தொடர்பிலான கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கோப்புப்படம்

13 Oct 2019

உன்னாவ் பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக எம்எல்ஏ விடுவிப்பு

செம்பனங்காய்கள். படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2019

மலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்