பிரியங்கா காந்தி: சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்

ஊழல் வழக்கு ஒன்றின் தொடர்பில் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வத்ரா அவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனம் வழியாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவிலான நிதித்தொகையை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்குத் திரு சிதம்பரம் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அவ்வாறு செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அதற்காகத் திரு கார்த்தி கையூட்டு பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தொடர்பில் தம்மைக் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்குமாறு திரு சிதம்பரம் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீதிமன்றமோ நேற்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதற்கிடையே  திருவாட்டி பிரியங்கா, திரு சிதம்பரத்திற்கான ஆதரவைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.

 

“மக்களவையின் மரியாதைக்குரிய, மிகவும் தகுதிவாய்ந்த உறுப்பினரான திரு சிதம்பரம் நமது நாட்டுக்காகப் பல வருடங்களாகச் சேவையாற்றியிருக்கிறார். அவர் நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். அதிகாரத்தின் முன்னிலையில் அவர் தயங்காமல் உண்மையைப் பேசுபவர். இந்த அரசாங்கத்தின் பலவீனங்களையும் அம்பலமாக்குபவர். ஆனால் கோழைகளுக்கு உண்மை தொந்தரவாக இருப்பதால் அவர் வெட்கத்திற்குரிய விதத்தில் வேட்டையாடப்படுகிறார்,”  என்று திருவாட்டி பிரியங்கா எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) மற்றும் செயலாக்கப் பிரிவைச் (Enforcement Directorate) சேர்ந்த அதிகாரிகள் திரு சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றது முதல் அவர் இதுவரை வெளியில் காணப்படவில்லை.

Loading...
Load next