புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்

திருச்சி: எச்சரிக்கையாக இல்லாவிட்டால் தமிழ்மொழியை விழுங்கிவிடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘கல்வி உரிமை மாநாடு’ திருச்சியில் நடந்தது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  நாராயணசாமி பேசுகையில், “மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். 

“இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வினால் மருத்துவக்கல்வி படிக்கமுடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். தற்போது மருத்துவம் படித்து முடித்ததும் மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும் என்கிறார்கள். 

“அடுத்ததாக பொறியியல் படிப்பதற்கும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என கொண்டுவர உள்ளனர்.

“புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 

“தற்போது அதனை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். 

“புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி மாநிலம் உறுதியாக உள்ளது,” என்றார் நாராயணசாமி.