பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் இந்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சுவாமி சின்மயானந்தை போலிஸ் நேற்று கைது செய்தது.

மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் சின்மயானந்த், 73. இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல ஆசிரமங்களையும் கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார்.

அந்த வகையில், ஷாஜகான்பூரில் உள்ள அவருக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அவர் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக காணொளி மூலம் புகார் கிளப்பினார்.

பின்னர் மாயமான அந்தப் பெண், ஒரு வாரத்திற்குப் பிறகு போலிசாரால் மீட்கப்பட்டார்.

அதன்பின் சின்மயானந்த் மீது உச்ச நீதிமன்றத்தில் அப்பெண் வழக்குத் தொடர, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, சின்மயானந்தால் தமக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க தமக்கு உதவி செய்த சின்மயானந்த், பின்னர் தாம் குளித்ததைப் படம்பிடித்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டியே கடந்த ஓராண்டாகத் தம்மைப் பாலியல் ரீதியாகச் சீரழித்து வந்ததாக அந்தப் பெண் தமது புகாரில் கூறியுள்ளார்.

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.