துருக்கிக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் கூறிய கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவரை எச்சரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் குறித்து எர்துவான் முன்வைத்த எந்த ஒரு கருத்துடனும் இந்தியா உடன்படாது என்று  வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் சென்றுள்ள எர்துவான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது, காஷ்மீர் மக்களின் போராட்டத்தையும் முதலாம் உலகப் போரின்போது வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிராக துருக்கி மக்கள் போராடியதையும் ஒப்பிட்டுப் பேசினார்.

இதையடுத்து, “இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என துருக்கி அரசின் தலைமைத்துவத்தைக் கேட்டுக்கொள்கிறோம். கருத்து தெரிவிக்கும் முன், காஷ்மீர் விவகாரம் தொடர்பான உண்மைகளை துருக்கி புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதம், இந்தியா மற்றும் தெற்காசிய வட்டாரத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதையும் துருக்கி அதிபர் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் திரு ரவீஷ் குமார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் சாடியிருந்தார். அதனால் கோபமடைந்த இந்தியா, அந்நாட்டிடம் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு மறைமுகமாகக் கட்டுப்பாடு விதித்து, பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.