டெல்லி போராட்டத்தில் வன்முறை வெடித்தது: தலைமை காவலர் பலி; பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்துக்காக இந்தியா வந்தடைந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் பதற்றம் நிலவியது.

போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் வன்முறைச் சம்பவத்தின் போது சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டம் நடைபெறும் என்பதால் போலிசார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் ஆதரவாக இருப்பவர்களும் மோதிக் கொண்டனர். ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசி  தாக்கிக்கொண்டனர். 

அச்சமயம் இரு வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதையடுத்து போலிசாரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. எனவே போலிசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், டெல்லியில் சில மெட்ரோ  ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த வன்முறைக்கு தலைமைக் காவலர் ஒருவர் பலியாகி உள்ளார். இதையடுத்து டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் பத்து இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நிலைமை தீவிரமடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அகமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி திரும்பியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது குடும்பத்தாருடன் நேற்று மாலை ஆக்ரா சென்று, தாஜ்மகாலை பார்வையிடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது வருகைக்கு முன்பாக டெல்லியில் வன்முறை வெடித்ததால் அங்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.