மருத்துவப் பணியாளர்கள் சீருடை அணியாத போர் வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும்தான் களத்தில் வீரர்களாக செயல்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போர் வீரர்களுக்கான உடைகளை அணியாத மருத்துவப் பணியாளர்கள் இந்தப் போரில் வெற்றி பெறுவது உறுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வை பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

“கொரோனா கிருமி கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் எங்கள் வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள்.

“இன்று உலகமே எங்கள் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடம் இருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய இரண்டையும் உலகம் எதிர்பார்க்கிறது,” என்றார் பிரதமர் மோடி.

கும்பல் மனநிலை காரணமாக முன்னணியில் உள்ள தொழிலாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் வன்முறைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய முரட்டுத்தனமான நடத்தை ஏற்கத்தக்கதல்ல என்றார்.

“கடந்த ஆறு ஆண்டுகளாக சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் பல ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து வந்தது. இன்றைய சூழலில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை நாம் சுகாதார, மருத்துவத் துறையிலும் பின்பற்ற வேண்டும்.

“களத்தில் உள்ள நம் வீரர்களுக்கு இதுவரை ஒரு கோடி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நமது உள்ளூர் உற்பத்தியாளர்களே தயாரித்துள்ளனர்.

“ஆரோக்கிய சேது செயலி குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவரை 12 கோடி மக்கள் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா கிருமிக்கு எதிரான போரில் இச்செயலி வெகுவாகக் கைகொடுக்கிறது,” என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.