இந்தியாவில் 10 பி. டாலர் முதலீடு செய்யவிருக்கும் கூகல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யத் திட்டமிடுவதாக கூகல் நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமான வெளிநாட்டுச் சந்தைகளில் தனது மின்னிலக்கச் சேவைகளின் பயன்பாட்டை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

உலகின் ஆகப் பெரிய இணைய தேடுதல் தளமான கூகலின் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவுக்கான கூகல் மின்னிலக்க மயமாதல் நிதியத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிதியத்தின்மூலம் கூகல் அந்நாட்டில் முதலீடுகளைச் செய்யவுள்ளது. பங்குகளின் மீதான முதலீட்டு, நிறுவன பங்காளித்துவங்கள், உள்கட்டமைப்பு,  செயலாக்கம் ஆகியவற்றின் தொடர்பில் முதலீடுகள் செய்யப்படும் என்று கூறிய திரு பிச்சை, இந்தியா மீதும் அதன் மின்னிலக்கப் பொருளியல் மீதும் கூகல் கொண்டுள்ள நம்பிக்கையை இந்நடவடிக்கைகள் பிரதிபலிப்பதாக இணைய கலந்துரையாடல் ஒன்றில்  தெரிவித்தார்.

இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துவதால் அது கூகலின் முக்கியமான சந்தைகளில் ஒன்று. அத்துடன் 450 மில்லியன் இந்தியர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.