சுடச் சுடச் செய்திகள்

இந்தியா: தொற்று தீவிரம்; அரசு நடவடிக்கை மும்முரம்

இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 669,99 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.4 மில்லியனை எட்டிவிட்டது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,033 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 942 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. முன்னதாக 46,706 பலி எண்ணிக்கையுடன் பிரிட்டன் நான்காவது இடத்தில் இருந்தது.

மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிவேகத்துடன் கிருமி பரவுகிறது. தொடர்ந்து 15வது நாளாக ஒரு நாளில் 50,000க்கும் மேற்பட்டோ ருக்கு அங்கு தொற்று ஏற்படுகிறது.

கொரோனா கிருமி பாதிப்பில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் தொடர்ந்து உள்ளது.

பல உயர் அதிகாரிகளும் முன்னிலைப் பணியாளர்களும் கிருமிப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் மருத்துவர்களும் சுகாதாரத் துறையினரும் பாதிக்கப்படுவது அந்நாட்டில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவருடன் மொத்தம் ஐந்து அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிரமங்களும் நெருக்கடிகளும் இருந்தபோதும் கிருமிப் பரவல் தடுப்பு, கிருமி சோதனை, சிகிச்சை போன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தி வருவதால் நலம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிட அங்கு உயிரி ழப்பு விகிதம் குறைவாக உள்ளது. அங்கு உயிரிழப்பு விகிதம் 1.98 விழுக்காடாக, மில்லியனில் 34 பேர் என இருக்கிறது. மேலும், குணமடைவோர் விகிதம் 70.98 விழுக்காடாக உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரேநாளில் புதிய உச்சமாக நேற்று முன்தினம் 13,408 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மும்பையில் மட்டும் ஒரு லட்சம் பேர் குணமடைந்து இருக்கின்றனர்.

முதன்முறையாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 830,391 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 268,456,88 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் கூறியது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தைத்தான் கிருமி மோசமாகத் தாக்கியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 5,871 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 314,520 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், அங்கு இதுவரை மொத்தம் 256,313 பேர் குணமடைந்துள்ளனர். 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை, தடுப்பு மருந்துகளை உருவாக்கி வரும் வேளையில், ரஷ்யாவிடமிருந்து தடுப்பு மருந்தை பெறுவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.

கிருமிப் பரவல் தடுப்பில் தீவிர கவனம் செலுத்து அதேவேளையில் பொருளியல் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்குதலும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. கிருமிப் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் அந்நாட்டில் ஏழை மக்கள் பெரும் அல்லல்களை அனுபவித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon