பெரும்பாலானவர்கள் பின்பற்றாத சமயங்களுக்கான வரவேற்பு

பிரபல சமயங்களிலிருந்து பிரியும் கிளைக்குழுக்கள் முதல் புதிதாக உருவாக்கப்பட்ட  சமயங்கள் வரை வெகு சிலரால் பின்பற்றப்படும் சமயங்கள் பல கடந்த நூற்றாண்டில் சிங்கப்பூரில் பரவத் தொடங்கின. ஜெஹோவாஸ் விட்னஸ், ஃபாலுங்கோங், சூ சி நிறுவனம் போன்ற இத்தகைய சில குழுக்கள் இங்கு செயல்படுகின்றன.

சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தில் சமய  சுதந்திரம் கட்டிக்காக்கப்படுகிறது. எந்தச் சமயமாக இருந்தாலும் அதன் நம்பிக்கைகளைப் பின்பற்றுவது  சிங்கப்பூரில் சட்டவிரோதம் அன்று. ஆனால் சில சமயக் குழுக்கள் இங்கு பதிவு செய்துகொண்டு செயல்பட முயலும்போது மற்ற குழுக்களைக் காட்டிலும் அதிகக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்குகின்றன. சமூக நிலைத்தன்மையையும் பொருளியல் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தும் சிங்கப்பூரின் தேசியவாதக் கொள்கைகளுடன் எந்த அளவுக்கு அந்தக் குழுக்கள் ஒத்துப்போகின்றன என்பதைப் பொறுத்துள்ளது என்று மென்ஹெட்டன் கல்லூரியின் சமய துறைக்கான இணைப் பேராசிரியர் டாக்டர் ராட்னி செபேஸ்டியன் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு,  ஜப்பானில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நிச்சிரன் பெளத்த சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட சோக்கா கக்காய் அமைப்பு சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

1972ஆம் ஆண்டில் சங்கப் பதிவகங்களில் இடம்பெற்ற சிங்கப்பூர் சோக்கா சங்கம் , சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு பங்களித்து வருகிறது. ஜப்பானின் சோக்கா கக்காயைப் போல் சிங்கப்பூர் சோக்கா சங்கம், அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதில்லை.

இதற்கு நேர்மாறாக, ஜெகோவாஸ் விட்னஸ் குழு, சங்கப் பதிவகங்களிலிருந்து 1972ஆம் ஆண்டு அகற்றப்பட்டுள்ளது.  தேசிய சேவை ஆற்றுவதற்கோ, பற்றுறுதி எடுப்பதற்கோ  இந்தச் சமயக் குழு, தனது உறுப்பினர்களைத் தடை செய்வதால் அது சங்கப் பதிவகங்களிலிருந்து அகற்றப்பட்டதாக உள்துறை அமைச்சு கூறுகிறது. அந்தக் குழு பிரசுரிக்கும் போதனை புத்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களைப் போல் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தோர் சிங்கப்பூரில் மிகச் சிலரே. 1970களில், இஸ்கோன் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் இங்கு பதிவு செய்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்கோன் துறவிகள் இங்கு நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அமெரிக்காவில்  சமூகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பான சில நடவடிக்கைகளுடன் அந்த அமைப்பு தொடர்புபடுத்தப்பட்டது இந்தத் தடைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஹரே கிருஷ்ணா பக்தர்கள் இந்த விதிமுறைகளைச் சமாளித்து இங்கு தங்களுக்காகச் சில வழிபாட்டு இடங்களை அமைத்துள்ளனர். இஸ்கோனின் பெயரைப் பயன்படுத்தாமல் இந்தியாவின் வைணவ சமயத்துடன் தொடர்புடைய பெயர்களை தங்களது அமைப்புகளுக்குப் பயன்படுத்துகின்றனர். பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அனுமதியும் தமது அமைப்புக்குக் கிடைப்பதாக ’கீதா ரீடிங் சோசைட்டி’ அமைப்பின் பேச்சாளர் திரு முத்துக்குமார் தெரிவித்தார்.