தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கவும் மொழிப் புழக்கத்தை மேம்படுத்தவும் பாடுபடும் அமைப்புகள், குழுக்கள், தனிமனிதர்களுக்கு மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஈராண்டுக்கு ஒருமுறை ‘தமிழ்ச்சுடர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறது.

கலாசாரப் பதக்கம் பெற்ற சிங்கப்பூரின் மூத்த கவிஞர்களில் ஒருவரான க.து.மு. இக்பால், ஊடகவியலாளரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவருமான திரு நா. ஆண்டியப்பன்   ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டின் இளம் சாதனையாளர் விருதை  24 வயது ஹரிணி வி வென்றார். தமிழ்மொழியை இளையர்களிடம் பரப்ப முயற்சி களை எடுத்து வரும்  ஹரிணி தேசிய நூலகத்தின் இளம் எழுத்தாளர் வட்டத்தை வழிநடத்துகிறார். 

இம்மாதம் 8ஆம் தேதி ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஐந்து பிரிவுகளில் எட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு முதன்முறையாக வழங்கப்பட்ட புத்தாக்கப் பிரிவுக்கான விருதை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் வென்றது.

அன்றாட வாழ்க்கையில் புத்தாக்கமிக்க வழிகளில் தமிழ்         மொழிப் புழக்கத்தை அதிகரிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக அச்சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. 

கல்விப் பிரிவு விருதுகளை சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியும்  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையும் வென்றன. 

கடந்த 44 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்ப் பேரவை, தமிழ் வளர்ச்சியையும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது. 

பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்மொழியை வளர்க்கவும் இளையர்களிடையே தமிழ்மொழியைக் கொண்டுசெல்லவும்  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏகே தியேட்டர்  நாடகக் குழுவுக்கும் அதிபதி இன்டர்நேஷனல் தியேட்டர் குழுவுக்கும் கலைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 

கலைத்துறை மூலம் தமிழை வளர்க்கும் முயற்சிகளுக்காக இரு குழுக்களுக்கும் விருதளிக்கப்பட்டது. 

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.