பகலில் போடும் குட்டித் தூக்கம்

பகலில் தூங்கினால் உடல் பருமனாகிவிடும். இதுதான் பலரது கருத்து. இந்தக் கருத்துக்கு பயந்தே அதிலும் குறிப்பாக பெண்கள் பகலில் தூங்க மறுத்து விடுகின்றனர். 

“ஆனால் இந்தக் கருத்து தவறு. வாரத்திற்கு குறைந்தது இருமுறையாவது குட்டித் தூக்கம் போடாமல் இருப்பதால் இதய நலன்களைத்தான் இழக்கிறோம்,” என்று அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டி உள்ளன.  

வயிறு நிறைய உணவைச் சாப்பிட்டுவிட்டு அளவுக்கு அதிக நேரம் தூங்கினால்தான் ஆபத்து என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

“பகலில் போடும் குட்டித்தூக்கம் இதயத்துக்கு நல்லதுதான். ஆனால், தினந்தோறும் இப்படி தூங்குவதைத் தொடரக்கூடாது,”  என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

“பணியிடமோ அல்லது வீடோ   எதுவாக இருந்தாலும் உங்கள் வேலைக்கு இடையில் குட்டித் தூக்கம் போடுவது நல்லது,” என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

“உண்மையில் பகல் நேரத்தில் போடும் குட்டித்தூக்கம் ஒருவர் புத்துணர்வுடன் செயல்பட உதவு கிறது. அதேசமயம் அளவுக்கு மீறிய தூக்கம் ஆபத்து,” என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குட்டித் தூக்கம் போடுவதால் இதய நோய் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் குறையும். 

ஆனால் தினசரி இதுபோல் குட்டித் தூக்கம் போடலாம் என்றெல்லாம் திட்டமிட வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் வலி         யுறுத்துகின்றனர்.  

வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும்  இந்த ஆய்வு கூறுகிறது.

தினசரி குட்டித் தூக்கம் போடு பவர்களுக்கு இந்த ஆபத்து இன்னும் கூடுதலாகும் வாய்ப்பு  இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.   

கடந்த ஐந்து ஆண்டுகளாக 35 முதல் 75 வயதுக்குட்பட்ட  3,462 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்தனர்.

ஆனால், பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதை விட்டுவிட்டு அரை மணி நேர தூக்கத்தை  ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும்  வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.