விலங்கியல் தோட்டத்தில் சுற்றித்திரியும் பெங்குயின்கள்

கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறார்கள். அதனால் பயன்பெற்றவர்கள் ஐந்தறிவு படைத்த விலங்குகள்தான். தற்பொழுது தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளிப்புற வளாகத்தில் சுற்றித் திரியத் தொடங்கி இருக்கின்றன.

சிங்கப்பூரர்கள் கொரோனா கிருமித் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்டு இருக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர். இந்தக் கட்டுப்பாட்டை தங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் ஆப்ரிக்கன் பெங்குயின்கள் பல இடங்களுக்குச் சென்று பல அனுபவங்களைப் பெற்று வருகின்றன.

ஏப்ரல் 7ஆம்தேதி முதல் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா, நைட் சஃபாரி ஆகிய இடங்கள் கிருமித் தொற்று காரணமாக மூடப்பட்டு விட்டன. அதனால் அங்கிருக்கும் விலங்குகள் பல இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து சுற்றி வருகின்றன.

வாரத்தில் மூன்று நாட்களுக்கு பெங்குயின்கள் காலையில் நீச்சல் குளத்திலிருந்து புறப்பட்டு சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்கின்றன. அங்கிருக்கும் சறுக்கு மரங்களில் சறுக்கி விளையாடி மண்ணில் கிடக்கும் வண்ண பந்துகளை உதைத்து விளையாடுகின்றன. அவற்றை பாதுகாக்கும் அதிகாரிகள் அவை தொலைந்து போகாமல் இருக்க அடிக்கடி அவற்றை எண்ணிக் கணக்கெடுக்கிறார்கள். மேலும் அவை மண்ணில் விளையாடுவதால் அவற்றின் கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் என்கின்றனர்.

பெங்குயின்கள் எப்போதும் ஒரு குழுவாகவே சுற்றித் திரியும் பழக்கம் உடையவை. அதனால் அவற்றில் ஒன்று முதலில் சென்றால் அதன் பின்னால் மற்றவையும் அவற்றைத் தொடரும். அங்கிருக்கும் கடல் சிங்கத்தையும் அவை பார்வையிட்டன.

இதுபோன்ற ஆப்ரிக்கன் பெங்குயின்கள் தற்பொழுது கடலில் மிதக்கும் எண்ணெய்க் கசிவுகளால் அவற்றுக்கான உணவும், தங்கும் இடங்களும் இல்லாமல் அழிந்து போகின்றன. மேலும் மீனவர்கள் பெங்குயின்களின் உணவான மீன்களைப் பிடித்து விடுவதால் அவற்றுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காமல் அவை அழிந்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா சிறுவர்களே!